2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ.வுக்கு மைத்திரி அழைப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.   

கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டிலான மக்கள் சந்திப்பு,  காத்தான்குடியில் திங்கட்கிழமை (29)  நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இன, மத பேதங்களுக்கு அப்பால்  அனைவரையும்; இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தப் பயணத்தில் என்னோடு கைகோர்த்து நிற்கின்றமை எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  அதேபோன்று ஜாதிக ஹெல உறுமய எங்களுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில்  தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் ஒத்துழைப்பு இருக்கின்றது. இந்தப் பயணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக எங்களோடு இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த நாட்டில் அனைத்து இனங்களும்; சமமானவை. அனைவருக்கும்  அனைத்துச் சுதந்திரமும் உண்டு. எல்லோரும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்துவதே, எமது சேவையாக இருக்கின்றது. அவரவர்  தங்களின் மதங்களையும்   கலாசாரங்களையும்  பின்பற்றுவதற்கு  சுதந்திரம் இருக்கவேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  ஒரு நல்ல மனிதராகக் கண்டோம். யுத்தம் முடிந்த பின்னர், அவருடைய அத்தனை விடயங்களிலும் மாற்றங்களை கண்டோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையோ, பண்டார நாயக்காவின் கொள்கையோ இன்று அவரிடம் இல்லை.

கிழக்கு மாகாண மக்களுக்கு உங்களுக்குரிய தொழில்களை செய்வதற்கு, நிம்மதியாக வாழ்வதற்கு, மதங்களை பின்பற்றுவதற்கு நிம்மதியான  சுதந்திரம் தேவை.

ஊழல் இல்லாத நல்லாட்சியை உருவாக்க நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

உங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. தொழில்கள் இன்றி இளைஞர்கள் பலர் இன்றிருக்கின்றார்கள். நான் வெற்றி பெற்றவுடன் தொழில்கள்  இன்றியுள்ள இளைஞர்களுக்கு நல்ல தொழில்களை  வழங்க நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. நான் ஜனாதிபதியானவுடன் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.

இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறும் எதிர்வரும் 8ஆம் திகதி எனது சின்னமான அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X