2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'கிழக்கு மாகாணசபையில் சமத்துவம் பேணப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணசபையை யார் ஆட்சி செய்தாலும், அங்கு சமத்துவம் பேணப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (8)  சிவநேசதுரை சந்திரகாந்தனின்  அலுவலகத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'கிழக்கு மாகாணத்திலேயே தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் அதிகமாக  வாழ்கின்றனர்.  இங்கு  தமிழ் முதலமைச்சராக நான் முதற்தடவையாக  இருந்தேன். அந்த அனுபவத்தை பார்க்கும்போது, இந்த மாகாணம் தமிழ், முஸ்லிம்கள் ஆட்சி செய்வதற்குரிய மாகாணமாகும். அந்த அடிப்படையில் தமிழரோ அல்லது முஸ்லிமோ ஆட்சி செய்யமுடியும். ஆனால், சமத்துவம் பேணப்படவேண்டும்.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்தின் காலப்பகுதியில் இந்த சமத்துவம் பேணப்படவில்லை. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இவ்வாறான விமர்சனங்களை, பிரச்சினைகளை நிறுத்திக்கொண்டு சமத்துவமாக புதிய முதலமைச்சர் ஆட்சி செய்யவேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஆட்சியை கிழக்கு மாகாணசபையில் உறுதிப்படுத்தியுள்ளது.  20க்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் ஆதரவாக கைச்சாத்திட்டதன் காரணமாக முதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஜனநாயக நாட்டின் ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயமாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தற்போதுள்ள கிழக்கு மாகாணசபையை எல்லோரும் சேர்ந்து வலுவுள்ள ஒரு மாகாணசபையாக மாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம் அல்லது தமிழர்களை ஆளுகின்ற எந்த நிறுவனமாகவும் இருக்கலாம் நியாயபூர்வமாக இயங்குகின்ற ஓர் ஆளுமை மிக்க சபையாக மாற்றவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்து மாகாணசபையில் ஆட்சி அமையுங்கள் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 12ஆம் திகதி மாகாணசபை கூடியபோது நாங்கள் கூறினோம். நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்றும் கூறினோம். ஆனால்,  இரண்டு பிரதான  கட்சிகளும் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயலாற்றியிருந்தாலும்,  பின்னர் வந்த நாட்களில் அந்தக் கூட்டு மாகாணத்தில் ஏற்படுத்த முடியாமல்போனது' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X