Princiya Dixci / 2015 பெப்ரவரி 16 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அஸ்ரப்.ஏ.சமத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும் கிழக்கு மாகாணத்துக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் முன்னெடுத்துச் செல்லப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், நேற்று திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.
தாருஸ்ஸலாமிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கத்தினால் கிழக்கு நிர்வகிக்கப்பட்டபோது கிழக்கில் பல காணிகளை அரசியல்வாதிகள் தங்களது கம்பனிகளுக்கு கீழ் எடுத்து அக்காணிகளில் எவ்வித அபிவிருத்திகளோ முதலீடுகளோ செய்யாது வைத்துள்ளனர். அவைகள் அனைத்தும் எமது அமைச்சரவைத் தீர்மானத்துடன் தடுத்து நிறுத்தப்படும்.
முதலமைச்சராக நான் பதவி ஏற்றவுடன் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் வழங்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதியின் வருடாந்த தொகையை 40 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளேன். கடந்த வருடம் 30 இலட்சம் ரூபாவே ஒதுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 04 அரசியல் கட்;சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவற்றில் 07 உயர்; பதவிகள் மிகுதியாக உள்ளன. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
அம்பாறை மாவட்டத்துக்கும் ஓர் அமைச்சர் பதவி கொடுக்கப்படல் வேண்டும். மாகாண சபை உறுப்பினர் சிப்லிபாருக், அலிசாஹிர் மௌலானா ஆகிய இருவரின் விருப்பத்துடனேயே நான் முதலமைச்சராக பதவியேற்றுள்ளேன். முன்னைய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின்படியே கிழக்கு மாகாண சபை இரண்டரை வருடத்துக்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவினதும் முன்னாள் ஜனாதிபதியினதும் அனுமதி பெறப்பட்டது.
முன்னாள் கிழக்கு ஆளுநர் ஓர் இராணுவ ஆட்சியாளராகவே இருந்துவந்தார். அதனால் சிறு விடயத்துக்கான அனுமதிகூட ஆளுநரினால் தேங்கிக் கிடந்தது. தற்பொது இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வுபெற்ற ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் எமது மாகாண நிர்வாகம் சகலதும் இலகுவாக நடைபெறலாம் என நம்புகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் செல்கின்றனர்.
அதனை நிறுத்தி அவர்கள் தமது வீட்டிலேயே அல்லது ஊரிலேயே இருந்து தொழில் செய்யக்கூடியதொரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும். அதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து முதலிட முன்வருமாறும் அவர்களுக்குரிய வசதிகளையும் நாம் செய்துகொடுக்க வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் பல அரச, தனியார் காணிகளை பாதுகாப்புப் படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளனர்.
மாகாண சபையின் அதிகாரத்தில் 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம் மாகாண சபைக்கு வழங்கப்படல் வேண்டும். அதில் மாகாண சபைக்கு காணி அதிகாரமும் பொலிஸ் என்பது ஒரு சிவில் சேவை அதிகாரமும் வழங்கப்படல் வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .