Sudharshini / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியில் பங்காளராகவிருந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டத்திலுள்ள இலுப்படிச்சேனை-அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் தேர்வு இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் இனத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்த கட்சி என்ற அடிப்படையில் இன்னுமோர் இனத்தின் உரிமையைப் பாதிக்காத வகையில் தமக்குக் கிடைக்கின்ற அமைச்சுப் பதவிகள் மூலமாக எவ்வித இன, மத மற்றும் பிரதேச வேறுபாடுகளுமின்றி மக்களுக்கான சேவையை வழங்கும்.
கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்தது. நாங்களும் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் என்ற அடிப்படையில் 'முதலமைச்சர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் தருகிறோம், கிழக்கில் ஆட்சியமைப்போம் வாருங்கள்' என்று கூறினோம். இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனத்துக்;குட்படுத்திய ஆட்சியுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போதும் இருசாராரும் அரசாங்கத்தை விமர்சித்தோம். தற்போது நாட்டின் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையில் அதிகூடியதாக பதினொரு ஆசனங்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில், முஸ்லிம் காங்கிரசுடன் மூன்று தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் பதவியைப் பெற்று ஆட்சியமைப்பதுக்கு முயற்சி செய்தோம்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அதனை நிறைவேற்றவிடாது முன்னைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டது. இவ்வாறு நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
எனினும் கிழக்கு மாகாணசபையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கட்சியின் தலைமையை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியது. அப்போது 'முஸ்லிம் காங்கிரஸ் எங்களை அழைக்கிறது, நாங்களும் ஆட்சியின் பங்காளராக இருந்து, தமிழ் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளையும் சேவைகளையும் செய்யப் போகிறோம், அனுமதித் தாருங்கள்'என்று கேட்டதனால் கட்சியின் தலைமை பீடம் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் அனுமதி வழங்கியதுடன் பேச்சுவார்தை நடத்துமாறு பணிப்புரை விடுத்தது.
பின்னர், பேச்சுவார்தையின் பயனாக கல்வி அமைச்சு உள்ளிட்ட இரண்டு அமைச்சுப் பதவிகளும் பிரதித்தவிசாளர் பதவியும் கிடைக்க இருப்பதாக அறிகிறேன். பதவிகளைக் கொண்டு தமிழ், முஸ்லிம் என்ற இனபேதம் இன்றி சேவையாற்றுவோம் என உத்தரவாதம் வழங்குகின்றேன்.
கடந்த காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சிற்றூழியர் நியமனத்தையேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிபாரிசுடன் வழங்கவில்லை. ஆனால், நாங்கள் அவ்வாறு செயற்படமாட்டோம். ஓர் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் இன்னுமோர் இனத்தின் உரிமையை பாதிக்கக் கூடிய வகையில் தழிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் செயற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .