Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு, கறுவாச்சோலை கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை தடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள்
இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சரிடம் தான் நாளை வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் இரா.துரைடெ;னம் கூறினார்.
இது தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை (22) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு மாவட்டத்தின்; மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவில் கெவிளியாமடுவிலுள்ள கறுவாச்சோலை கிராமத்தில் 104 தமிழ்க்குடும்பங்கள் வாழ்ந்துள்ளன.
1986ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக அங்கு வாழ்ந்த 104 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிமுன்மாரியில் இரண்டு வருடங்களும் களுதாவளை, தேத்தாத்தீவு கிராமங்களில் ஐந்து வருடங்களும் ஏனைய காலப்பகுதிகளை அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் கழித்துவந்துள்ளனர்.
மீண்டும் 2011ஆம் ஆண்டு மீளக்குடியமர வந்தபோது, 40 குடும்பங்களின் காணிகள் ஏனைய சமூகத்தை சேர்ந்தவர்களால் விவசாயச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இக்காரணத்தினால் முழுமையாக இந்தக் குடும்பங்களை மீள்குடியேற்ற முடியாமல் போனது. இந்த நிலையில், அண்ணளவாக 25 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர்த்தப்பட்டன.
மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு மட்டும் 100,000 ரூபாய் பெறுமதியான தற்காலிக வீடுகளும் விவசாயம் செய்வதற்கான விதை நெல்லும் மேட்டுப்பயிர் செய்வதற்காக உழுந்து, பயறு, கௌப்பியும் வேலி அமைப்பதற்குரிய முட்கம்பிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்தச் சூழ்நிலையில் ஏனைய தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி விவசாயம் செய்துவந்தவர்கள், மீண்டும் காணிகளை மீள ஒப்படைக்காத நிலையிலும் வீதி அமைப்பு, மின்சார வசதி, நிரந்தர வீடு, காட்டு யானைகளின் நெருக்கடி, போக்குவரத்து வசதியின்மை போன்று பல்வேறு காரணங்கள் காரணமாகவும் மீண்டும் 2013ஆம் ஆண்டு; இடம்பெயர்ந்தனர். தற்சமயம் இரண்டு குடும்பங்களே வசிக்கின்றன. ஏனைய குடும்பங்கள் மீளக்குடியமர ஆர்வமாக உள்ளன.
எனினும், கெவிளியாமடுவுக்கு அருகில் உள்ள பெரும்பான்மையின மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் காணிகள் அத்துமீறிய வகையில் பிடிக்கப்பட்டு வருகின்றன.
எனவே கெவிளியாமடு, கறுவாச்சோலை கிராமத்தில் மீண்டும் இந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு
1) இவர்களுடைய காணிகளை பிடித்தவர்களிடமிருந்து மீண்டும் உரிமையாளர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுத்தல்.
2) யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு மின்சாரவேலி அமைத்தல்
3) போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுத்தல்
4) வீதிகளை அமைத்துக்கொடுத்தல்,
5) வாய்க்கால்களுக்கு சிறு பாலங்களை அமைத்தல்.
6) மின்சார வசதியை ஏற்படுத்திக்கொடுத்தல்
7) நிரந்தர வீட்டுத்திட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்தல்.
8) குடிநீர் வசதியை ஏற்படுத்தும் முகமாக கிணறுகளை அமைத்துக்கொடுத்தல்.
9) ஆறு மாதங்களுக்கான உலருணவு வசதியை வழங்குதல்.
10) நிரந்தரமாக விவசாயம் செய்வதற்கான உதவிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்களை திட்டமிட்டு முன்னிலைப்படுத்தி இவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .