Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'இனவாத அரசியல் பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் எச்சரித்தேன். பொது பல சேனா மற்றும் கடும்போக்குவாத அமைப்புக்களுக்கு அனுசரணை வழங்கிவருகின்றமை சிறுபான்மை சமூகங்களின் வெறுப்பை மட்டுமல்ல, நேர்மையான பெரும்பான்மையின மக்களின் வெறுப்பையும் நீங்கள் சம்பாதித்து அதன் விளைவுகளை சந்திக்கவேண்டிவரும் என்று கூறினேன்' இவ்வாறு முன்னாள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் ரூபி முஹைதீன் மாதிரிக்கிராம வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (22) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கடந்த டிசெம்பர் மாதம் ஆரம்பித்த அரசியல் சதுரங்க ஆட்டம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தில் நான் தோற்றுள்ளதாக யாரும் நினைக்கக்கூடாது. இந்த சதுரங்க ஆட்டம் கிட்டிய காலப்பகுதியில் முடிவடையப் போவதில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தில் விளையாடத் தெரிந்த, தோற்றுப்போகாத ஆட்டக்காரனாக சவால் விடுத்து விளையாட நான் என்றும் தயாராக உள்ளேன்.
அரசியல் சூழ்நிலை மாற்றத்தின் முக்கியமானதொரு காலகட்டத்திலேயே தற்பொழுது நாம் இருந்துகொண்டிருக்கின்றோம்.
இனவாதம், பிரதேசவாதம் கடந்து வெற்றி அளிக்கும் அரசியல் வரலாற்றை சாதித்துக் காட்டவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்பவன்; நான். இனவாதம் ஊட்டி, பிரதேசவாதம் காட்டி சமூகங்களை ஊர் ஊராகப் பிரிக்கின்ற உதவாக்கரை அரசியல்; செய்தவன் அல்ல என்ற முன்னுதாரணமாக திகழ்வதிலும் யாருக்கும் சோரம் போகாத துரோக அரசியல் செய்து பிழைப்பு நடத்தியவன் அல்ல என்ற செய்தியையும் நாட்டுக்கு கூறிவைக்க விளைகின்றேன்.
முஸ்லிம்களின் தேசிய அரசியலை அழிக்க முற்படாமலும் தனிப்பட்ட அரசியல் ஒழுக்கக்கேடுகளுக்கு உட்படாமலும் உட்கட்சிப்பூசல்களுக்கு இடங்கொடாமலும் உன்னத அரசியலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துகொண்டிருப்பதில் பெருமைப்படுகின்றேன். எதிர்க்கட்சியிலிருந்து எதுவும் செய்யமுடியாது என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
சிறுபான்மையினரின் அரசியலை கையாள்வதில் நான் எப்பொழுதும் நிதானமாகவும் அவதானமாகவும் இருந்துவந்திருக்கின்றேன். அதில் ஒரு பாகமே கடந்த ஜனாதிபதி தேர்தல் கடைசித் தறுவாயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் எழுதிய கடிதம். இந்த விவகாரம் எல்லா ஊடகங்களிலும் சமூகங்களின் மத்தியிலும் சிலாகித்து பேசப்பட்டது. சிறுபான்மை இனங்களை காப்பாற்றுகின்ற சாணக்கியமும் வியூகமும் என் கடிதத்தில் உள்ளடக்கமாக இருந்தது. இதை அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை.
தனி நபர் விசுவாச அரசியல் செய்து பழக்கப்பட்டவன் நான் அல்ல. மனுக்குலத்தின் விசுவாசியாக நான் இருப்பதில் பெருமைப்படுகின்றேன். சிறுபான்மை சமூகங்களை காப்பாற்றுகின்ற கருத்துக்களை நேரடியாகவும் வெளிப்படையாகவும் கூறுவதில்; நான் என்றுமே பின்நின்றதில்லை. எனது சொந்த அரசியலை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ஜனரஞ்சக கருத்துக்களை நான் ஒருபோதும் கூறி ஏமாற்றியதும் கிடையாது. யாருக்கும் வங்குரோத்து அரசியல் செய்து சிறுபான்மை இனங்களுக்கு துன்பம் விளைவிக்க ஒருபோதும் நான் நினைப்பவன் அல்ல.
எல்லா இனங்களையும் இணைத்து இணக்கப்பாட்டு அரசியல் செய்து தனித்துவம் பேணுகின்ற எனது அரசியல் பணி எதிர்காலத்திலும் தொடரும். இதில் எந்த சவாலையும் சாவகாசமாக சமாளிக்க நான் தயாராக இருக்கின்றேன்' என்றார்.
கடந்தகால யுத்தத்தால் பல்வேறு இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த 50 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் ரூபி மாதிரிக்கிராமத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடியே 20 இலட்ச ரூபாய் செலவில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்படடுள்ளன.
இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அப்துல் றஹுமான், ஏறாவூர் நகரசபையின் பிரதி நகரபிதா எம்.ஐ.தஸ்லிம், நகரசபை உறுப்பினர்களான ஜே.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.பெரோஸ், பி.எம்.அமீன் இஸ்ஸத் ஆஸாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன்பாவா, பயனாளிக்குடும்பங்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .