2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அதிபர் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனை வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய அதிபரின் இடமாற்றத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்தும் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரியும் அப்பாடசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (23) காலை  பெற்றோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அதிபரை இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் கையொப்பமிட்டு இடமாற்ற கடிதம் அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதிபர் மீது  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல், இடமாற்றம் செய்யப்படுவதை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கூறினர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  கலந்துரையாடினர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, 'குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒருவரை இடமாற்றம் செய்யமுடியாது. குற்றவாளி என்று இனங்காணப்பட்டால் மாத்திரம்  நடவடிக்கை எடுக்கமுடியும். இது தொடர்பில் வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்  தெரிவித்தார்.

'இந்த அதிபரின் திட்டமிடலில் சிறப்புறும் எம் பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர உதவுங்கள்', 'சீரான கல்வி முன்னெடுப்பை குழப்பவேண்டாம்', 'அதிபர் இன்றி ஐந்தாம் தர பரீட்சை விண்ணப்பத்தில் பெற்றோர் எவ்வாறு கையொப்பம் இடுவது' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தாங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X