2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பிரேரணை பிற்போடப்பட்டமையை த.தே.கூ. கண்டிக்கின்றது: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்    

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்ற விடயம் தொடர்பில் 3 தடவைகள் கொண்டுவரப்படுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதமும் ஐ.நா. சபையில் கொண்டுவரவிருந்த இந்த பிரேரணை 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இந்த பிரேரணை பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட். காக்காச்சிவட்டை விஷ்ணு வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை (24) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்த பிரேரணை பிற்போடப்பட்டமையை கண்டித்து யாழ். கல்விச் சமூகம் ஆர்ப்பாட்டம் மூலமாக கண்டிக்கின்றது. அவர்களின் ஆர்ப்பாட்டக் கண்டனத்துக்கு கிழக்கில் இருக்கின்ற நாமும் உறுதுணை அளிக்கின்றோம்.  ஐ.நா. வில் அறிக்கை வரவேண்டும். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து கொடுக்கவேண்டிய பொறுப்பும் சர்வதேசத்துக்கு உள்ளது.

இலங்கை அரசு மாறியுள்ளது என்ற காரணத்துக்காக ஐ.நா. விசாரணையை இடைநிறுத்தவோ, மாற்றவோ முடியாது.  தமிழர்களின் பிரச்சினை சர்வதேச ரீதியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பதை எமது மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற 7 தேர்தல்களில் எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியில் பலப்படுத்தியுள்ளார்கள். அந்த ஜனநாயகப்பலம் சர்வதேசத்தில் ஓரங்கமாக இருந்துகொண்டிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களின் வரலாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. இதற்கு அடித்தளமிட்டவர்கள் எமது தமிழ் மக்கள்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில், கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தால்,  தற்போது கிழக்கில் ஆட்சி அதிகாரம் எமது பக்கம் இருந்திருக்கும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் கைநழுவ விட்டுவிட்டோம்.  

ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக கூறிக்கொண்டு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு இப்போதிருந்து முனைகின்றார்கள்.  கடந்தகாலத்தில் பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாணத்தில் தக்கவைத்தவர்கள் நாங்கள். ஆனால், எமது கூட்டமைப்பிலும் வேறு பல கட்சிகளிலும் தேர்தலில் குதிக்க பலர் முனைகின்றார்கள். அவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X