2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

எல்லோரையும் பாதுகாக்கின்ற கலாசாரத்தை உருவாக்குவோம்: நஸீர்

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இன, மத, சாதி. பேதம் பாராது அனைவரும் இணைந்து ஒரே கொடியின் கீழ் நின்று எல்லோரையும் பாதுகாக்கின்ற கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சரை புறந்தள்ளிவிட்டு இந்நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதை காலம் தற்போது உணர்த்தி நிற்கின்றது.

கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த வரவு-செலவுத் திட்டம் 1,100 மில்லின் ரூபாய் தான். இது ஒரு சாதாரண சிறிய நிறுவனத்தின் செலவுத்தொகைக்கு ஒப்பானது.

இதனைக் கொண்டு எதனைச் சாதிப்பது என்பதை விட கிழக்கு முதல்வர் என்கின்ற அரசியல் அதிகாரத்கை; கொண்டு சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும் தனித்துவத்தையும் தற்காத்துக் கொள்வதுதான் இந்த முதலமைச்சர் பதவியிலுள்ள கனதியான விடயமாகும்.

இது  முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி என்பதை விடவும் இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதே சாலப்பொருத்தம். ஆனால், அந்த வெற்றியினூடாக முஸ்லிம்கள் மாத்திரம் நன்மையடையப்போவதில்லை. மாறாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களும் நன்மையடையவுள்ளனர்.

இன்று எங்களுக்கு சம அந்தஸ்துக் கிடைத்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த நாட்டில் வரப்போவதாக இருந்தாலும் கடந்த காலத்தைப்போல முஸ்லிம்களைப் புறந்தள்ளி விட்டு எவரும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது. இதற்கு வித்திட்டவர் மறைந்த தலைவர் அஷ்ரப்தான்.

கிழக்கு மாகாண சபை கொண்டுவந்த வரவு-செலவுத் திட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியமையானது கிழக்கின் இன ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது

சிறுபான்மையின அரசியல் தலைமைகளும் மக்களும் ஒற்றுமைப்பட வேண்டிய காலகட்டம் இது. ஒற்றுமைப்பட்டால் பாரிய அபிவிருத்தியை வெகு விரைவில் அடைந்து கொள்ள முடியும்.

எல்லாக் கட்சிகளும் சேர்ந்து கிழக்கின் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்று நாம் இனிப் பிரிந்து நிற்க முடியாது. அனைவரும் இணைந்து ஒரே கொடியின் கீழ் நின்று எல்லாரும் எல்லோரையும் பாதுகாக்கின்ற கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.  அத்துடன் மட்டக்களப்பை வறுமைக் கோட்டுப் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும்.

இந்த இலக்குகளை அடைய இன மத பேதமில்லாது எல்லோரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் 13 அரசியல் திருத்தத்தை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்திக் காட்டுவேன். இதற்கு இன ஒற்றுமை முக்கியம். அதற்கு எனக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X