2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தனியாக ஆட்சி செய்யவேண்டுமென்ற பிடிவாதத்தாலேயே முதலமைச்சர் விடயத்தில் இழுபறி'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தனியாக ஆட்சி செய்யவேண்டும் என்ற நிகழ்ச்சிநிரலில் மிகவும் பிடிவாதமாக இருந்த காரணத்தினாலேயே மீண்டும் முதலமைச்சர் விடயத்தில்  இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு, வாழைச்சேனை  அந்நூர்  தேசிய பாடசாலையில் திங்கட்கிழமை (2) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'விட்டுக்கொடுப்புகளுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸ் தெளிவாக பேசி இருக்கவேண்டும். கிழக்கு மாகணத்தில் இனி வரப்போகின்ற தேர்தலில் ஆளும் தரப்பை நிர்ணயிக்கின்ற அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கப்போவது என்பதில் எவரும் மாற்றுக்கருத்து கொள்ளத் தேவையில்லை.

இம்முறை கிழக்கு மாகாணசபையில் 11 ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 16 ஆசனங்களை எடுத்து ஆட்சி அமைக்கின்ற சந்தர்ப்பம் வரும்போது, கௌரவமான முறையில் அதில் பங்கை எங்களுக்கு தரவேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

அந்த எதிர்பார்ப்புக்கு நாங்கள் இப்பொழுது செய்யவேண்டியதாவது,  அவர்களுடைய எதிர்பார்ப்பில் 100 சதவீதம் கொடுக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை அவர்களின் கோரிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸ் நிறைவேற்றி கொடுக்கவேண்டும். இல்லை என்று சொன்னால், கிழக்கு மாகாணத்தில் காலங்காலமாக அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு காலகட்டம் ஏற்பட்டுப் போகலாம்.

அரசியல் என்பது உடனடிப் பிரச்சினைக்கு உடனடி தீர்மானம் காண்கின்ற விடயம் மாத்திரம் அல்ல. எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினையை மையப்படுத்தி ஒரு தூர நோக்கத்தோடு நாங்கள் செயற்படவேண்டும். கிழக்கு மாகாணசபை இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகளோடு நடந்துகொண்டு இருக்கும் என்று சொன்னால், நான் நினைக்கிறேன் அவசர அவசரமாக மாகாணசபை கலைக்கப்படலாம் என்ற ஒரு விடயமும் அதில் மறைந்து கிடக்கின்றது' என்றார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி  வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.காலித், ஹைராத் ரான்ஸ்போட் நிர்வாகசபை பொருளாளர் எம்.எஸ்.அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X