2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குடும்ப சண்டையில் குறுக்கிட்ட பொலிஸார் மீது குண்டுவீச்சு

Princiya Dixci   / 2015 மார்ச் 04 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கணவன், மனைவிக்கு இடையில் இடம்பெற்ற குடும்பச் சண்டையை விசாரிப்பதற்காக சென்ற பொலிஸார் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பு, ராணமடு மாதிரிக்கிராமத்தில் இன்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

கைக்குண்டு வெடிக்காத நிலையில், குண்டை வீசிய நபரை பொலிஸார் மடக்கிப்பிடித்து பொலிஸில் தடுத்துவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, ராணமடு மாதிரிக்கிராமத்தில் கணவன், மனைவிக்கிடையில் குடும்பத் தகராறு இடம்பெறுவதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அதுதொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெல்லாவெளிப் பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.

இங்கு பிரச்சினையை ஏற்படுத்திய நபரை கைதுசெய்ய முற்பட்ட வேளையில் அந்நபர் கைக்குண்டை வீசி விட்டு தப்பிச்செல்வதற்கு முயன்றுள்ளார். கைக்குண்டு வெடிக்காமையால் தப்பித்த பொலிஸார் தப்பிச்செல்ல முயன்ற அந்த நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

வீசப்பட்ட கைக்குண்டு நீண்ட காலம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்து அண்மையில் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேலும் பல ஆயுதங்களை அவர் மறைத்து வைத்திருக்கலாமென சந்தேகிக்கும் களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வெல்லாவெளிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெலக்கதர ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற சுற்றுவட்டாரத்தை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X