2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தருமாறு மட்டு. தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தங்களுக்கு ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தர உதவுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணத்திடம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக சனிக்கிழமை (7) ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணத்தின் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்துக்கு சென்று இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  

பத்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் கடும் ஆசிரியர் தட்டுப்பாடு நிலவிய காலத்திலிருந்து  தொண்டர் ஆசிரியர்  பணியை வேதனம் இன்றி செய்துவருகின்றோம்.  2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் கூட நேர்முகப்பரீட்சைக்கு சென்றும்,  தங்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவில்லை.  இது தொடர்பில் கவனம் செலுத்தி தங்களுக்கான  ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தருமாறு மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள்  கோரிக்கை விடுத்தனர்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் தாம் சித்தியடைந்து,  ஆசிரியர் நியமனத்தை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு எனவும் இவர்கள் கூறினர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைட்ணம்,  'தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆசிரிய நியமனம் 2007இல் வழங்கப்பட்டபோது, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இல்லையென்பதால்,  சிலர் தட்டுப்பட்டனர்.

தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை நான் அறிவேன்.

உங்களை ஆசிரியர் நியமனத்துக்குள் உள்வாங்கும் நிலை தொடர்பில்  சமிஞ்ஞை தெரிந்தால்,  அதனூடாக எமது முயற்சியை தொடரமுடியும்.

இந்த ஆண்டு உங்களை ஆசிரியர் நியமனத்துக்குள் வாங்கி ஆசிரியர் நியமனம் வழங்க சந்தர்ப்பங்கள் இல்லை. ஏனெனில்  அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம் மற்றும்  திறைசேரி இதற்காக அனுமதி வழங்கவேண்டும். இப்படியான பல விடயங்கள் உள்ளன. அவை எதுவும் இந்த ஆண்டில் இடம்பெறுமா என்பது சந்தேகம்.

இந்த நிலையில், இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று, மத்திய அரசாங்கத்துக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்தி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து, அதனூடாக ஆசிரியர் நியமனத்தை பெற முயற்சிக்கவேண்டும். அல்லது கிழக்கு மாகாணசபையிலுள்ள திணைக்களங்கள் அல்லது சபைகளுக்கு ஏதாவதொரு நியமனத்தினூடாக உங்களை அரச வேலைக்குள் உள்வாங்கச் செய்யவேண்டும்.

இதற்கான முயற்சிகளில் நீங்கள் ஈடுபடவேண்டும்.  அதற்கான உங்கள் முயற்சிக்கு நான் ஒத்துழைக்க தயாராகவுள்ளேன்' என அவர் கூறினாhர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் ஐம்பது தொண்டர் ஆசிரியர்கள் தொண்டர்களாக 2007ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கடமையாற்றிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தலைவர் ஏ.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X