Suganthini Ratnam / 2015 மார்ச் 08 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளமையானது, தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எடுத்துக்;காட்டாகும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (8) விஜயம் செய்த அவர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவியேற்ற அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
என்ன விலை கொடுத்தாவது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும். தமிழ் -முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வது ஆபத்தானதாகும்.
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளமையானது, தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எடுத்துக்;காட்டாகும். இதேபோன்று, தேசிய அரசியலில் எதிர்க்கட்சியொன்று இல்லாத, நல்லாட்சி மிக்க அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு பாரிய பங்களிப்பை செய்துள்ளார்கள். இந்த ஒற்றுமை இந்த நாட்டின் அனைத்து இடங்களிலும் காணப்படவேண்டும்.
இந்த நாட்டில் எல்லோரும் சமமாக வாழவேண்டும். சமத்துவமாக சகல சமூகங்கள் நடத்தப்படவேண்டும் என்று விரும்புகின்ற ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார். அவருடைய நடவடிக்கைகள் எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியேற்பின்போது கூறியமையானது, எமக்கு அவர் மீது இன்னும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இன்றைய காலகட்டம் நல்லதொரு காலகட்டமாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் சில சில பிரச்சினைகள் வரும். ஆனால், அந்தப் பிரச்சினைகள் மிகப்பெரிய பிரச்சினையாக மாறுவதில்லை. எங்களுக்குள் பிரிவினையும் ஏற்படுவதில்லை.
இந்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தவேண்டிய பொறுப்பு மாகாண அரசுக்கு பொறுப்பானது. கிழக்கு மாகாணசபை அதற்கான தீர்மானத்தை அதன் அமைச்சரவையில் எடுத்து எமக்கு அறிவித்தால், அதன் பின்னர் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் ஆயத்தமாக உள்ளேன்' என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார், அலி சாஹீர் மௌலானா, சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சர் ஹஸன் அலி இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, எறாவூர், வாழைச்சேனை வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்தார்.
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago