2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் நிகழ்வை புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 08 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்    

சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி கலந்துகொண்ட நிகழ்வொன்றுக்கு வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் அந்நிகழ்வின் இடையில் வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

சுகாதார இராஜாங்க அமைச்சர் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகைதந்தார். அமைச்சர் வைத்தியசாலைக்கு வந்து வரவேற்பு நிகழ்வு முடிவுற்று சற்று நேரத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடாராசா ஆகியோரும் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மேற்படி வைத்தியசாலையின் முதலாவது நோயாளர் விடுதியை பார்வையிட்டு, இரண்டாவது விடுதியை பார்வையிடுவதற்கு திரும்பிக்கொண்டிருக்கையில், இந்நிகழ்வில் சற்று நேரத்துக்கு முன்னர் இணைந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடாரா ஆகிய இருவரும் இந்நிகழ்வை தாம் புறக்கணிப்பதாக கூறி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இந்நிகழ்வை புறக்கணித்து வெளியேறியமைக்கான காரணம் என்ன என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையிடம் கேட்டபோது, 'தம்மை உரிய முறையில் இந்த வைத்தியசாலை நிர்வாகமும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற இராஜாங்க அமைச்சரும் வரவேற்கவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதாக தெரிவித்துதான் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் வரவில்லை அவர் வரும்வரை நாம்  வீதியில் காத்திருப்போம்' என தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவிடம் கேட்டபோது, 'எம்மை மேற்படி வைத்தியசாலை நிர்வாகம் உரியமுறையில் அழைக்கவில்லை. நாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் வருவதாகத்தான் வந்துள்ளோம். இங்கு வந்து பார்த்தபோதுதான் தெரிகிறது கிழக்கு மாகாண முதலமைச்சர் வரவில்லை என்று. அதனால்தான் இந்நிகழ்வை புறக்கணித்துவிட்டு இடைநடுவில் வெளியேறினோம்' என தெரிவித்தார்.

இவர்களின் கருத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனிடம் கேட்டபோது, 'மத்திய அமைச்சிலிருந்து சுகாதார இராஜாங்க அமைச்சர் எமது வைத்தியசலையை பார்வையிடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 வரவுள்ளதாக எமது தலைமைக்காரியாலயம் எமக்கு அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொண்டேன். மாறாக, சுகாதார இராஜாங்க அமைச்சரைவிட வேறு எந்த அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவித்தல் விடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா ஆகியோர் எமது நிகழ்வு ஆரம்பித்து சற்று நேரத்துக்கு  பின்னர்தான்; வருகை தந்து இந்நிகழ்வில் இணைந்துகொண்டார்கள். அவர்களை வரவேற்றோம். பின்னர் அவர்களாகவே வெளியேறிச் சென்றுவிட்டார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பாகும்' என தெரிவித்தார்.

இதனிடையே மேற்படி மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும்  இந்நிகழ்வைப் புறக்கணித்து விட்டு  வைத்தியசாலை வீதியில் நின்றுகொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசிங்கம்,  மாகாணசபை உறுப்பினர் பி.இந்திரகுமார் ஆகியோர் நிகழ்வை புறக்கணித்துவிட்டு நின்ற சக மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா ஆகிய  இருவரையும் சமாதானப்படுத்திக்கொண்டு பிறிதொரு நிகழ்வுக்கு  அழைத்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X