2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'த.தே.கூ., மு.கா. இணைந்திருப்பதால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 09 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்திருப்பதன் மூலம் 13ஆவது  திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியும் என்று   கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற கூட்டத்தின்போதே,  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து இன்று ஆட்சி அமைத்துள்ளன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்; ஒன்றுசேர்ந்துள்ளமை வரலாற்றில் முக்கியமானதாகும்.

மத்திய அரசில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றுசேரமுடியுமாக இருந்தால்,  இங்கு நாம் ஏன் ஒன்றுசேரமுடியாது என்று கேட்க விரும்புகின்றேன்.

இங்கு இரண்டு விடயங்களை நாம் மேற்கொள்ளவேண்டும்.  அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தவேண்டும். அதற்கு குறிப்பாக, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் எமது இணைவின் மூலம் ஒன்றுபட்டு மேற்கொள்ளவேண்டும்.

இன்று அரசியல்வாதிகள் ஒற்றுமையாகியுள்ளமை போன்று, அதிகாரிகளும் ஒற்றுமையாகவேண்டும். அதேபோன்று, மக்களும் ஒற்றுமையாகவேண்டும்.

மேலும், கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் திருமணம் செய்துள்ளது. அதன் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கவேண்டும்.

கொக்கட்டிச்சோலை வைத்தியசாலைக்கு சென்று அந்த வைத்தியசாலையை பார்த்தபோது, அது அடிப்படை வசதிகளற்று இருப்பதை எண்ணி கவலையாகவுள்ளது. அந்த வைத்தியசாலையில் ஒரு கட்டிலில் மூவர் இருக்கும் நிலையை கண்டேன். கொக்கட்டிச்சோலை வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யவேண்டும். அந்த வைத்தியசாலை தண்டிக்கப்பட்டுள்ளதா என எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இந்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X