2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'நீடித்த சமாதானம் உள்ளிட்டவற்றில் பெண்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுவதனூடாக முழுமையடையும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 09 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நீடித்த சமாதானம், நிலையான அபிவிருத்தி போன்றவற்றில் பெண்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் உள்வாங்கப்படுவதனூடாகவே அவை முழுமை பெறும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் பிரிவு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (8.) மாலை நடத்திய மகளிர் தின வைபவத்தின்போது பிரகடனம் செய்யப்பட்டது.

பெண்களின் வலுவாக்கத்தின் ஊடாக குடும்ப சமூக அரசியல் சாதக ஸ்திரத்தன்மையை எய்த முடியமென திடமாக நம்புகின்றோம். பெண்களின் கல்வி ரீதியான அடைவு போற்றுவதற்குரியதாக இருக்கின்றபோதிலும், அவர்களின் சமூக அரசியல் ரீதியான பார்வை இன்னும் ஆழமாக்கப்படவேண்டும்.

எமது மண்ணில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் இழப்புக்களையும் வலிகளையும் அதிகம் சுமந்தவர்கள் பெண்களே.   எமது சமூகத்தை மீள கட்டியமைப்பதிலும் மக்கள் சிந்தனையுள்ள தூரநோக்கான உறுதிமிக்க அரசியல் தலைமைத்துவத்தை  கட்டியெழுப்புவதிலும் எமது பங்கு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காக 33 வீத இட ஒதுக்கீடு புதிய அரசியலமைப்புத் திட்டத்தினூடாக உறுதிப்படுத்தப்படவேண்டும்.
நாட்டின் நிர்வாகத்துறை, இராஜதந்திரத்துறை, அரச நிறுவனங்களில் தலைமைத்துவப் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் 25 சதவீதமாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தேசிய பிராந்திய அரசியல் கட்சிகளில் முடிவெடுக்கும் அதிகாரமிக்க குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பல அரசியல் கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காக வழிகள் திறந்துவிட்டபோதும், கணிசமான தகுதியான பெண்கள் ஏற்க முன்வருவதில்லை. இந்திலை மாற்றப்பட்டு தகுதியுள்ள பெண்கள் உரிய பொறுப்புக்களை ஏற்பதற்கு முன்வரவேண்டும். அதற்கு ஏதுவாக குடும்ப சமூக சூழல் வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்.

சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அவற்றை விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள தனியான அமைச்சு உருவாக்கப்படுவதோடு மாகாணசபைகளிலும் முதலமைச்சின் கண்காணிப்பின் கீழ் புதிய செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன,; உள்நாட்டில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

காணாமல் போன தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் கைதிகள் தொடர்பாக அரசாங்கம் வெள்ளை அறிக்கை விடுவதுடன் மிக குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவதுடன் காணாமல் போனவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச அனுசரணையுடன் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டுமென' என  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X