2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'அரசியல்த்துறை சமூகத்துக்கு பணியாற்றுகின்ற துறை'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 10 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

அரசியல் என்பது எங்களுடைய சமூகத்துக்கு  அதிகமாக பணியாற்றிவிட்டுச் செல்கின்ற ஒரு துறை. அத்துறையை திறமையுள்ள எவரும் சமூகத்துக்காக  செய்துவிட்டுச் செல்லலாம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு, கல்லூரி மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.  இங்கு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு  தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக நான் இருந்தேன். எனக்கு பதவிகளுக்கு ஆசை கிடையாது. அது தானாக கிடைத்தது.  நான் இரண்டாவது முறை மாகாணசபையில் போட்டியிட்டு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காவிட்டாலும்,  நான் ஓர் அமைச்சராக வரமுடியாது என்று  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் சொன்னேன்.   நான் நினைத்திருந்தால் அதிலே ஓர் அமைச்சராக வந்திருக்கமுடியும்.

மாகாண அமைச்சராக இருந்து செய்யும் அபிவிருத்தியை விட அதிகமான வேலைத்திட்டங்களை  வெளியிலிருந்து செய்துள்ளேன். இதை ஏன் சொல்கின்றேன் என்றால், கிழக்கு மாகாணம் முஸ்லிம்,  தமிழ், சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று சொன்னாலும்,  இந்த நாட்டில் ஓர் அதிகாரப்பகிர்வு முறைமை தேவை என்று போராடியவர்கள் தமிழர்களே. அதற்கு உயிர் கொடுத்தவர்கள் பலர். அந்த அடிப்படையில் தமிழர்களுக்கு உரித்தான விடயத்தை சந்தர்ப்பம் வருகின்றபோது பெற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக, நாம் அரசியலுக்கு வந்து பிராந்திய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளோம்.

இந்த மாகாணத்தில் வருகின்ற மாற்றத்தில் அதிகமாக தமிழர்களுக்கு செயலாற்றவேண்டும் என்ற எண்ணம்; எங்களுக்குள்ளும்  இருக்கின்றது. குறிப்பாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதை பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல்  வருமாக இருந்தால், அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்துகாட்ட வேண்டும் என்று எண்ணினோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X