Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ செவி சாய்த்துள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினால் இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'எமது சங்கத்தினால் 24.03.2015 அன்று அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை கவனத்திற்கொண்ட ஆளுநர், அவ்விடயம் சம்பந்தமாக கலந்தாலோசிப்பதற்காக ஆசிரியர் சங்கத்தை அழைத்துள்ளார். இச்சந்தி;ப்பு 20.04.2015 அன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்துடன், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது, பின்வரும் விடயங்களை ஆளுநரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தத் தீர்மானித்துள்ளோம்.
1.கிழக்கு மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத்தின் உள்ளடங்குவோரில் குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் அதிபர்கள் 80 சதவீதமானோர் தமிழ் பேசும் சமூத்தைச் சேர்ந்தோராவர். இவர்களின் பிரச்சினைகளை புரிந்கொள்ள முடியாத, தமிழ்மொழி பேச முடியாத ஒருவரால் எவ்வாறு தீர்க்க முடியும்...?
2.அமைச்சரவை தீர்மானத்தின்படி, சுயாதீனமான பொதுச்சேவை ஆணைக்குழுவில் செயலாளராகப் பதவி வகிக்கும் ஒருவர் ஏனைய அமைச்சுப் பொறுப்புக்களில் பதவி வகிக்க முடியாது. அவ்வாறாயின் கிழக்குமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எவ்வாறு கிழக்குமாகாணக் கல்வியமைச்சின் செயலாளராக இருக்கமுடியும்? அவ்வாறு பதவி வகிப்பது அமைச்சரவைத் தீர்மானத்துக்கு முரணானதொரு செயற்பாடாகும். அத்தோடு பொதுச்சேவை ஆணைக்குழுவில் ஊழல் மோசடிகள் மற்றும் பழிவாங்கல்கள் ஏற்படுவதற்கு இத்தகைய நிலைமை வழிவகுக்கின்றது.
3.கல்வி நிர்வாகம் தெரியாத ஒருவர் கல்வியமைச்சின் செயலாளராகப் பதவி வகிப்பது, கிழக்கு மாகாணத்தின் கல்வியைச் சீரழிக்கும் செயற்பாடாகும். இந்நிலைமை தற்பொழுது, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட ஆரம்பித்துள்ளது. தற்போதைய செயலாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளரைக் கடமையைச் செய்ய விடாது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தடுத்து வருகிறார். ஒரு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் மாகாணக் கல்விப்பணிப்பாளரே முழு அதிகாரம் கொண்டவராகும். இதனைக் கல்வி நிர்வாகம் தெரிந்த எவரும் மறுக்கமாட்டார்கள். மேலும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மாகாணப் பாடசாலைகளைத் தரிசிப்பதற்கான அனுமதி மறுத்தல், மாணவர்களைக் கௌரவிக்கும் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம், பணிப்பாளரை அலுவலகத்தினுள் முடக்கிவைத்து, மாகாணத்தின் கல்வியைச் சீரழிப்பதே செயலாளரின் திட்டமாக எங்களால் ஊகிக்க முடிகிறது.
4.இலங்கை நிர்வாக சேவை தரம் 3இல் 2000ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு, அதன் பின்னர் படிப்படியாக வகுப்பு 1 இற்;கு வந்தவரே தற்போதைய செயலாளர்.
அதேவேளை, தற்போதய மாகாணக் கல்விப் பணிப்பாளர் 2002ஆம் ஆண்டு கல்வி நிர்வாக சேவை வகுப்பு 1 ஐப் பெற்றுக் கொண்டவர். ஆகவே, இருவரும் சமாந்தரச் சேவைகளில் வகுப்பு 1 ஐச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சேவை மூப்பின் அடிப்படையில் தற்போதைய மாகாணக் கல்விப் பணிப்பாளரே பொருத்தமானவராக விளங்குகின்றார் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
5.எனவே சமாந்தர சேவையில் உள்ளவர்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதே சிறந்த நிர்வாகமாகும். ஆனால், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் கல்வி நிர்வாக சேவை உட்பட ஏனைய சேவைகளை மதிக்கத்தவறுவது, இலங்கையின் ஒட்டுமொத்த சேவையையும் சீரழித்து, அரச இயந்திரத்தைப் பலவீனப்படுத்தும் செயற்பாடாகும்.
6.கடந்த வாரம் திணைக்களத் தலைவருக்குத் தெரியாமலும் முன் அனுமதி பெறாமலும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கடமை புரியும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை மாத்திரம் மாகாணக் கல்வியமைச்சுக்கு அழைப்பித்துக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான செயற்பாடானது மூவினச் சமூகத்தின் ஒத்துழைப்புடன், மாகாணத்தில் இயங்கிவரும் தேசிய அரசைக் குழப்பும் இனவாதச் செயற்பாடாகவே நாம் சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது.
எனவே மேற்கூறப்பட்ட ஐந்து விடயங்களையும் ஆளுநருடனான சந்திப்பின்போது, எடுத்துரைக்கவுள்ளதோடு, மாற்றம் ஏற்படும்வரை எமது கோரிக்கையிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதனையும் கௌரவ ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளோம்.
இவ்வறிக்கைக்கு இஸ்லாமிய ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் எம்.அனஸ் மற்றும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.பி.கமால்தீன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago