Suganthini Ratnam / 2015 மே 01 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்
உதயசிறியின் விடுதலைக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரிய குன்றில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை கிறுக்கிய குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவித்துவந்த உதயசிறி நேற்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வதுடன், இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த 28 வயதான சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சிகிரிய குன்றை பார்வையிடச் சென்ற சமயத்தில், அங்குள்ள புராதன சின்னங்கள் தாங்கிய சுவரில் தனது பெயரை கிறுக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தினால் 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
எனினும், இவ்வாறு சுவரில் தனது பெயரை கிறுக்குவது பாரிய குற்றம் என்பதை அறியாத நிலையிலேயே இதனை அவர் மேற்கொண்டார் எனும் அடிப்படையில், இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு இவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென மத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் இரு மேன்முறையீடுகள் செய்யப்பட்டதுடன், பல சமூக அமைப்புகள், ஊடகங்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் கூட இதற்காக ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடந்த சித்திரை புதுவருடப்பிறப்புக்கு முன்னதாக ஜனாதிபதி உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய பணிப்புரை வழங்கியிருந்தார். எனினும், ஏற்கெனவே மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறையீடுகளை வாபஸ் பெறுவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் மற்றும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருந்த அரச விடுமுறை போன்ற பல்வேறு காரணங்களினால் உதயசிறி விடுதலை தாமதப்படுத்தப்பட்டு அவர் தொடர்ந்தும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். எனினும், பலரின் கவனத்தையும்; அனுதாபத்தையும் பெற்றுக்கொண்டிருந்த உதயசிறி இன்றையதினம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுடன், அவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியறிவோ அல்லது முறையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கின்ற வசதிகளையோ தங்களால் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்களது நியாயங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாதுபோனதாக உதயசிறியின் தாய் ஊடகங்களுக்குத் தெரிவித்திருத்தார்.
இந்நிலையில் அக்குடும்பத்துக்கான சட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டிருந்ததுடன், அதன் பிரதிநிதிகள் குறித்த யுவதியின் வீட்டுக்கும் பலமுறை விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பொருளாதார உதவியும்; வழங்கியிருந்தது. அத்துடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டுமென ஜனாதிபதிக்கும் வேண்டுகோள் ஒன்றை அனுப்பிவைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள உதயசிறியின் விடுதலைக்காகப் பாடுபட்ட, குரல் கொடுத்த அனைவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது . குறிப்பாக, இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி சட்ட ரீதியில் முயற்சிகளை மேற்கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஷ் நூர்தீன், தட்சினாமூர்த்தி, ருஷ்தி ஹபீப் போன்றவர்களுக்கும் இது தொடர்பில் அதிக அக்கறையுடன் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்த ஊடகங்களுக்கும் அத்தோடு இது தொடர்பில் குரல் கொடுத்த அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஏனைய சமூக அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago