Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 05 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சிறுபான்மையினரின் பேரம் பேசும் சக்தியும் ஆட்சியை தீர்மானிக்கும் அந்தஸ்தும் அடையாள அரசியலும் அழிந்துபோகக்கூடிய ஆபத்து வந்துள்ளது என்பதையிட்டு தான் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத்தின் இல்லத்தில் திங்கட்கிழமை (04) இரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'19ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இப்பொழுது 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலம் பற்றி பேசப்படுகின்றது. 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலம் என்பது ஒட்டுமொத்தமாக பெரிய பெரும்பான்மையினக் கட்சிகளில் ஏதாவதொரு கட்சி தனித்துநின்று ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பை உருவாக்கிக்கொடுப்பதற்கான ஒரு திட்டம் என்றே நான் கருதுகின்றேன்.
அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் ஏதாவதொரு காலகட்டத்தில் சிறுபான்மை மக்களுடைய, கட்சிகளினுடைய ஆதரவோ சிறிய கட்சிகளினுடைய ஆதரவோ பெறப்படாமல், தனித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அரசை அமைப்பதற்குரிய திட்டமாக இது அமைந்துள்ளது.
1978ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை முடிவுக்கு வருவதானது, ஒட்டுமொத்தமாக இவ்வளவு காலமும் சுமார் 37 வருடகாலமாக இலங்கையினுடைய நாடாளுமன்றத்தை அமைப்பதில் சிறுபான்மை மக்களுக்கு இருந்துவந்த பேரம் பேசும் சக்தியை தேவையற்றதாக்கி உள்ளது.
20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மையினரின் பேரம் பேசும் சக்தி நிச்சயமாக இல்லாமல் போய்விடும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சிறுபான்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற பிரதிரதிநிதித்துவம் தங்களுக்கு கிடைத்தால் போதும் என்று கருத்துக்கள் தெரிவிப்பதை நான் பார்க்கின்றேன். ஆனால், விகிதாசார அடிப்படையில் இத்தனை பிரதிநிதித்துவம் எமக்கு கிடைப்பதில் குறைபாடுகள் வந்தாலும், ஒட்டுமொத்தமாக இரண்டு பெரிய பெரும்பான்மையினக் கட்சிகளிலொன்று தனித்துநின்று எந்தவொரு சிறுபான்மை அல்லது சிறிய கட்சிகளினதும் ஆதரவின்றி நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியும் என்றுள்ளமை ஆபத்தானது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதின் மூலம் 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளிலேயே, தற்போதைய ஜனாதிபதி தன்னுடைய அதிகாரங்களை கணிசமானளவு விட்டுக்கொடுக்கத் தயார் என்று நிரூபணமாக்கியுள்ளார்.
விட்டுக்கொடுப்புக்கு தயாரான சிறந்த தலைவர் தான் என்பதை அவர் உலகுக்கு காட்டியுள்ளார். இதற்கு முன்னர் கோலோச்சிய ஜனாதிபதிகள் தாங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கத் தயார் என்று பேச்சளவில் கூறி வந்தபோதும், அதனை செயலிலும் நிரூபித்துள்ளவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
19ஆவது திருத்தம் ஒட்டுமொத்தமாக ஒரு நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகார முறைமையை இல்லாமல் செய்கின்ற திருத்தம் அல்ல. ஆனால், நாடாளுமன்றத்துக்கு முன்பெல்லாம் காணப்பட்ட அதிகாரத்தை அதிகரித்து வழங்குகின்ற, தற்போதைய ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களை கணிசமானளவு கட்டுப்படுத்துகின்ற ஒரு சட்டமூலம்.
இதற்கு எல்லா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை கட்சிகளும் ஆதரவளித்திருக்கின்றன.
தனிநபரிடமிருந்த அதிகாரம் ஓரளவேனும் நாடாளுமன்றத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதில் எல்லோரும் குறிப்பாக சிறுபான்மையினர் மகிழ்ச்சியடைகின்றார்கள். சிறுபான்மையினருடைய அரசியலும் இப்பொழுது ஒரு நிலைபேறானதாக உள்ளது. ஆனால், 20ஆவது திருத்தச் சட்டம் என்னவாறான திருத்தங்களை சமர்ப்பித்து அங்கிகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும், இப்பொழுது சிறுபான்மை இனத்தவருக்கு இருக்கின்ற அரசியல் அந்தஸ்து இருக்குமா என்பது கேள்விக்குறி.
தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக சமூகத்தினரை பொறுத்தவரையில் எத்தனை பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது இரண்டாவது படிநிலையிலுள்ள பிரச்சினை.
நாடாளுமன்றத்தில் ஓர் அரசை தோற்றுவிப்பதற்காக சிறுபான்மையினரில் தங்கியிருக்கவேண்டியதாக இதுவரை சிறுபான்மையினத்தவருக்கு இருந்துவந்த பேரம் பேசும் சக்தி இல்லாமல்; போய்விடும் என்பது முதலாவது பிரச்சினை.
இதனால் இதுவரை கட்டிக்காத்து வந்த சிறுபான்மை அரசியலும் அதன் அந்தஸ்தும் சிறுபான்மைக் கட்சிகளும் அடையாள அரசியலும் நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டு அடையாளமே தெரியாமல் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது.
அப்படி நடந்தால் சிறுபான்மையினரின் கதி என்னவாகும்?
மத்தியில் கூட்டாட்சி இனிமேல் தேவையே இல்லையென்றாகும்போது இனி எவ்வாறான அரசியல் நன்மைகளை சிறுபான்மையினர் அனுபவிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
இந்த விடயங்களை சிறுபான்மையினர் சிலாகித்துப் பேசவேண்டிய அவசியம் இருக்கின்றது. இதைத்தான் இங்கு நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், மலையகத்தவர்கள் ஒரு கோரிக்கையாக விடுக்கவேண்டும் என்று நான் அவாவுறுகின்றேன்' என்றார்.
இந்த மத்திய குழுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் பாபா, ஏறாவூர் நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.பெரோஸ், முன்னாள் நகரசபை உறுப்பினர் எம்.ஏ.சி.அப்துல் லத்தீப் உட்பட கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
1 hours ago