2025 மே 17, சனிக்கிழமை

தமிழர்களுக்கான தீர்வினை வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது

Sudharshini   / 2015 மே 10 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

தமிழர்களுக்கான நியாயமான தீர்வினை வழங்க வேண்டிய கடமை இந்த நாட்டின் அரசாங்கத்துக்கு உள்ளது. நாம் இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்றோம் என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

செங்கலடி கரடியனாறு மணிபுரம் மக்களுடனான சந்திப்பொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டிருந்தார். இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களாகவும்; பொறுப்பாளர்களாகவும் இருந்தவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலியாக மாறியதும், வெளிநாட்டு வங்கி கணக்கு, உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் என்றெல்லாம் குவித்து வைத்திருக்கின்றார்கள்.

இறுதியாக எமது இனத்திற்காக குரல் கொடுத்தவர்களை கொலை செய்தார்கள். இவர்கள் குறித்த ஆதாரங்களை தற்போது சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.

தந்தை செல்வாவின் தலைமையில் அகிம்ஷைப் போராட்டங்கள் நடத்தினோம். அப்போது பல ஒப்பந்தங்கள் இடப்பட்டு நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீக பகுதிகள் என தெளிவுபடுத்தப்பட்டன.

ஆனாலும், அதனைப் பொய்ப்படுத்த இந்த நாட்டில் இருக்கின்ற பேரினவாதிகள் முயற்சி;த்தனர். இங்கு ஆளும் கட்சி ஒன்றைத் தீர்மானித்தால் அதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. இதன்போது அகிம்ஷை ரீதியில் போராடி அதற்கு சரியான தீர்வு கிடைக்காத நிலையில், எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இருப்பினும் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் இந்த ஆயுதப் போராட்டம் மௌனித்தது. அதனை மேற்கொண்டு நடத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது மக்களால் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை எமது மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டின் கடந்த அரசாங்கம் எல்லாக் கட்சிகளையும் உடைத்தது. இலஞ்சம் மற்றும் அமைச்சுப் பதவிகளை காட்டி அனைவரையும் பிரித்தது.

ஆனால், அதற்கெல்லாம் இடம்கொடுக்காத கட்சியாக எமது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு இருந்தது. நாங்கள் நினைத்திருந்தால் மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து பல சலுகைகளை பெற்றிருப்போம். மேலும் பல சௌகரியங்களுடன் சொகுசாக ஆடம்பர வாகனத்தில் சென்றிருப்போம்;. மக்கள் மத்தியில் வந்து வீடு தருவோம், கிணறு தருவோம், மலசல கூடம் தருவோம் என்று கூறி வாக்கு கேட்டிருப்போம். ஏனெனில், பலரும் அவ்வாறு தான் இருந்தார்கள். ஆனால் நாம் அவ்வாறு செல்லவில்லை. இனியும் அவ்வாறு செய்ய போவதுமில்லை.

 இந்த நாட்டில் எமது இனம் தேசிய இனமாக இருந்தும், சிறுபான்மை என்று சொல்லி சிங்கள அரசாங்கம் எங்களை அடக்கி வந்தது. எங்களது உரிமைகள் அத்தனையிலும் கை வைத்ததுடன் எமக்கு நியாயமாக தரவேண்டிய அரசியல் உரிமைகளையெல்லாம் மறுத்து வந்தது. இவ்வாறு இருந்த நிலையில் தான் எமது இளைஞர்கள் பல தியாகங்களைச் செய்தார்கள்.

நாம் இவர்களின் பின்னால் போயிருப்போமாக இருந்தால், அவர்களின் அத்தனை தியாகங்களும் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், இவ்வளவு தூரம் கடந்த அரசாங்கம் எம்மை நசுக்கியும் தர்மத்திற்காக எமது மக்களுக்காகவும் எமது கொள்கையில் மாறாதிருக்கும் போது, எமது சகோதரர்களுடன் ஒன்றாக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் அரசாங்கத்தின் சொகுசு வாகனங்கள் வாழ்க்கைக்காக, அமைச்சுப் பதவிகளுக்காக, கோடிக்கணக்காக உழைப்பதற்காக எமது இனத்தை விற்று சென்றார்கள்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள். நாங்கள் யாரும் எமது மக்களின் பிள்ளைகளை வீட்டுக்கு வந்து அடித்துப் பறிக்கவில்லை. நீங்கள் பிள்ளைகளைத் தரவில்லை என்பதால் உங்களை வெளியேற்றவில்லை. தற்போது இது தொடர்பான விடயங்கள் வெளிவருகின்றன. அந்த தாய்மார்களால் நீதி நியாயம் கேட்கப்படுகின்றது. இதற்கு அனைவரும் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.

நான் அவர்களிடம் கேட்கின்றேன், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் உறவுகளை உரியவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பதில் பெற்றுக் கொடுப்பீர்களா என்று கேட்கின்றேன். தர்மம் கதைப்பதற்கு முதலில் அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.

முன்னர் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் போது, அதனை முன்பிருந்தவர்கள் தாங்கள் தான் கொண்டு வந்து எமது மக்களுக்கு கொடுப்பதாக கூறி வேடம் பூண்டார்கள். ஆனால், தற்போது அவர்கள் இல்லை, அந்த அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவில்லையா. ஆனால் தற்போது ஒரு வித்தியாசம் இருக்கின்றது என்னவென்றால் கடந்த முறை அவர்களுக்கு ஒரு தொகைப் பணம் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. நான் மக்களுக்கு கூறிக் கொள்வது ஒன்றுதான் அபிவிருத்தித் திட்டத்திற்கு வரும் பணத்தில் எந்த அதிகாரிக்கும், எந்த அரசியல் வாதிக்கும் பணம் கொடுக்கக் கூடாது. கிடைக்கப்பெற்ற பணம் அனைத்தும் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதை முன்பிருந்த எவரும் கூறியிருக்க மாட்டார்கள்.

அப்பணம் முழுவதையும் முழுமையாகப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறும் கூறும் துணிச்சல் இந்த தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மாத்திரமே இருக்கின்றதே தவிர, முன்பிருந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த ஒட்டுண்ணிகள் எவருக்கும் இருக்கவில்லை.

நாம் எமது மக்களுக்காக எம்மால் இயன்றவரை குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் அபிவிருத்தி செய்யவில்லை என்று நீங்கள் குறை நினைக்கலாம். நாங்கள் அபிவிருத்தி செய்தால் எமது அபிலாஷையை விற்றுவிட்டுதான் அபிவிருத்தி செய்திருக்க வேண்டும. எமது மக்கள் இதுவரை செய்த தியாகங்களை துஷ்பிரயோகம் செய்து விட்டுத்தான் இந்த அபிவிருத்தியைச் செய்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போது சற்று காலம் மாறிவிட்டது. தற்போது இருக்கின்ற அரசாங்கம் கூட எமக்கு அமைச்சுப் பதவி தருவதாக அழைத்தது. நாம் போயிருந்தால் இவ் அரசாங்கம் விடுகின்ற தவறைக் கூட நாம் பார்த்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும். ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வந்தவர்கள் அதற்காக இனியும் நாம் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம் அதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .