2025 மே 17, சனிக்கிழமை

'113 ஆடுகள் பலியிடப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயமாகும்'

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா

யாழ். வலி தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரான்பற்று புளியடி வைரவர் ஆலயத்தில், 113 ஆடுகள் பலியிடப்பட்ட விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மிருகவேள்வி என்ற வகையில் யாழ். மாவட்டத்தின் சில ஆலயங்களில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் வெட்டப்படுவது சைவ மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் விடயமாகும்.

முன்னாள் கௌரவ இந்து விவகார பிரதேச அபிவிருத்தி அமைச்சரான மட்டக்களப்பைச் சேர்ந்த செ.இராசதுரை ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் இந்த உயிர் கொலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு தடுத்து நிறுத்தினார்.

தற்போது கிழக்கு மகாணத்தில் ஒரு சில சடங்கு ஆலயங்களில் மாத்திரம் ஒரு சில கோழிகள், ஆடுகள் பலியிடப்படுகின்றது. அதையும் விரைவில் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் யாழிலுள்ள பல ஆலயங்களில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் பலியிடப்படுதல் நடைபெற்றுவருகின்றது. சைவத்தை வளர்த்த பெருமக்கள் பலர் பிறந்த யாழ். மண்ணில் வாய் பேசா மிருகங்கள் ஆலயங்களில் வேள்வி என்ற பெயரில் பலியிடுவதை யாழ்பாண சைவச் சமூகம் ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கேள்விக் குறியே.

இருந்தாலும் ஒரு சில சைவ அமைப்புக்களும், சைவ பெருந் தொகையினரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்திலும் இந்த உயிர் கொலைகளை தடுக்கும் செயற்பாடு உள்ளடக்கப்பட்டிருந்தும் இந்து கலாசார அமைச்சு இதன் மீது கவனம் செலுத்தாமை வேதனைகளை தருகின்றது.

இவ்வாறான உயிர் கொலை நடாத்தப்படும் ஆலயங்களின் பகுதிகள் இயற்கை அனர்த்தத்தாலும் செயற்கைளாலும் பெரிதும் பாதிக்கப்படுவதையும் கடந்த கால வரலாறுகள் காட்டி நிற்கின்றது. இவ்வாறான துன்பியல்களை எதிர்காலத்திலும் நாம் எதிர்நோக்காத வகையிலும் எமது சைவ சமயத்தின் மேன்மையை பாதுகாக்கும் வகையிலும் இந்து ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலியிடுதல் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .