2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'எழுச்சி மிக்க செயற்பாட்டின் முதலாவது சுவடு இந்த நடமாடும் சேவை'

Gavitha   / 2015 மே 16 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய மாகாணசபையின் எழுச்சி மிக்க செயற்பாட்டின் முதலாவது சுவடு இந்த நடமாடும் சேவை. இதில் நாம் பொது மக்களுக்கு வழங்கிய இன்றைய சேவையில் ஓரளவு தான் திருப்தியை காணமுடிந்தது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநாகர சபையில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற கிழக்கு மாகாண நடமாடும் சேவையின் முடிவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது அமைச்சானது விவசாயம் மற்றும் மந்தை மேய்ப்போடு கூடுதலாக தொடர்புடைய மக்களினுடைய செயற்பாடுகள் தொடர்பான இந்த நடமாடும் சேவை பற்றிய செய்தி அவர்களுக்கு சென்றடையவில்லை என்பதால் இன்று குறைந்தளவான சேவையை மாத்திரமே எம்மால் வழங்க முடிந்தது.

அநேகமாக கூட்டுறவு தொடர்பான விடயங்கள் சிலவற்றில் நகர்ப் புறம் சார்ந்த அமைப்புகள் அதிகம் வருகை தந்தமையால் அச்சேவையை  ஓரளவு திருப்திகரமாக செய்யக்கூடியதாக இருந்தது.

இவ்வாறான நிலையில் நடமாடும் சேவை பற்றி மக்களுக்கான தெளிவு படுத்துதல் போதாது என்பது என்னுடைய அமைச்சைப் பொருத்தளவில் கண்டு கொண்ட விடயமாக இருக்கின்றது.

இந்த நடமாடும் சேவையைப் பொருத்த மட்டில் இங்கு நல்லதொரு சூழல் ஏற்படுத்தப்பட்டது. அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் மக்கள் எல்லோரும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருக்கின்ற போது ஒரு புது அனுபவம் பிறக்கின்றது.

எமது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பினைப் பொருத்த மட்டில் நாம் இன்னும் கொலோனியல் நிலையில் இருந்து மாறவில்லை. எப்போதும் எமது அதிகாரிகள் சிவப்பு வளையம் எனும் வரையரைக்குள்ளேயே இருப்பவர்கள். அந்த சூழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களும் ஒரே இடத்தில் இருக்கின்ற போது, கொஞ்சம் தளர்ச்சியடைந்த நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமை மக்களுக்கு கூடுதலான சேவையை செய்யக்கூடிய நிலைமையை உருவாக்கும்.

பத்து காரணங்கள் ஒரு விடயத்தை செய்ய முடியாமைக்காக இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு முக்கிய காரணம் அவ்வியடத்தை செய்வதற்காக இருக்கும். ஆகவே நாங்கள் பத்து காரணங்களை ஓரப்படுத்தி அந்த ஒரு காரணத்தை கருத்தில் கொண்டு அவ்விடயத்தை மேற்கொள்ளும் போதுதான், அது சேவையாக இருக்கும். இது போதனை அல்ல அதிகாரிகள் சேவை நோக்கத்தோடு இருக்கின்ற போது, அதனை மேற்கொள்வதற்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கின்றதா என்பதை கண்டுபிடித்து அதனை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் எப்போதும் பக்கபலமாக இருப்போம்.

ஏனெனில் நிர்வாகிகள் கடமைகளை மேற்கொள்ளும் போது அது தொடர்பில் தங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக வேண்டி வரும். ஆனால் அதனை எங்களுடைய சமூகத்துடன் மேற்கொள்ளும் போது அது உங்களுக்கு ஆக்கபூர்வமாக இருக்கும்.

இந்த நடமாடும் சேவையானது எமது முதலாவது அடி. அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது நாம் கூடுதலான அனுபவங்களைப் பிரயோகிக்கக் கூடியதாக இருக்கும் மக்களுக்கு நல்ல சேவை செய்யக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .