2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கு புதிய உபவேந்தர் நியமனம் குறித்து அறிக்கை

Gavitha   / 2015 மே 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தராக, கலாநிதி சபீனா இம்தியாசை நியமிக்குமாறு கோரி ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

வியாழக்கிழமை (14) நடைபெற்ற மத்திய குழுவின் அவசரக்கூட்டத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, தமது கட்சியின் தலைவர் 'ஃபீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகாவின் கவனத்தை இவ்விடயத்தில் ஈர்க்கும் பொருட்டு மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது பதவியிலுள்ள உபவேந்தரின் இரண்டாவது பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், புதிய உபவேந்தரைத் தெரிவு செய்யும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றபோது, பல்கலைக்கழகத்தின் கவுன்ஸில் மூவரைத் தெரிவு செய்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

அவர்களில் ஒருவர் கலாநிதி சபீனா இம்தியாஸ் என்பவராகும். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 வருடங்களாக விஞ்ஞானபீடத்தின் தலைவியாக இருந்து வருகின்ற, சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராகும்.

இதுவரையில் எத்தகைய ஊழல் மோசடிகளிலும் சம்பந்தப்படாதவராக இருந்து வருவதுடன், இப்பல்கலைக்கழகத்தின் புவிசார் நிலைமைகளிலும் ஏனைய விடயங்களிலும் அனுபவத் தேர்ச்சியும் கொண்டவராகும். அரசியல்கட்சிகளின் செயற்பாடுகளில் ஆர்வங்காட்டாத, கல்முனைப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களாக நியமிக்கப்படுவோரில் அதிகமானோர் விஞ்ஞான பீடத்தின் தலைவர்களாக இருந்தவர்களாக இருந்துள்ள போதிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளின் சிபார்சுக்கமையவே தகுதி இல்லாதவர்களும்கூட உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள கசப்பான அனுபவங்களாகும். எனவே, நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்திலாவது இந்த நிலை மாற வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது இப்பல்கலைக்கழக செனட் சபையினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மூவரில் கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்கள் மாத்திரமே உப வேந்தர் பதவிக்கு சகல தகுதிகளும் கொண்டவராகும். மேலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான முஸ்லிம் யுவதிகளும் தமது துறைசார் பட்டப்படிப்பை இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருவதனால், பெண்ணொருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவதன் மூலம் இப்பல்கலைக்கழகத்தின் ஒழுக்க விழுமியங்களில் பாரிய மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட வழிகோலுவதாகவும் அமையும்.

அடுத்த மாதத்துடன் தற்போதைய உபவேந்தரின் இரண்டாவது பதவிக் காலமான 6 வருடங்கள் முடிவடைவதால், கலாநிதி சபீனாவை புதிய உபவேந்தராக நியமிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தங்களை வேண்டுகின்றோம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X