2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'கல்வி முன்னேற்றமே ஏறாவூர் பற்றி வெளியுலகுக்கு பறைசாற்றுவதற்கு அமைந்தது'

Suganthini Ratnam   / 2015 மே 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூரின் கல்வி முன்னேற்றமே  ஏறாவூர் பற்றி வெளியுலகுக்கு பறைசாற்றுவதற்கு அமைந்துள்ளது என்று ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள ஏறாவூர் கோட்ட மட்டப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, பிரதி கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் கல்விக் கோட்டம் மிகக் குறைந்த பாடசாலைகளையும் மிகக் குறைந்த மாணவர்களையும் கொண்டுள்ளன.  அதனால், இந்த கல்விக் கோட்டத்தை கல்வி அடைவு மட்டத்திலே மேலும் வினைத்திறன் மிக்க கோட்டமாக மாற்ற வேண்டும் என்பதில் ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிகவும் கரிசனையாக உள்ளது.

ஏறாவூர் கல்விக் கோட்ட மட்டத்தில் பாடசாலைக் கல்வி அடைவு மட்டத்தை உயர்ந்த தரத்துக் கொண்டுவருவது பற்றி கலந்துரையாட வேண்டும் என்று நாம் கல்விப் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவரின் பங்குபற்றுதலுடன் நாம் இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தோம்.

கடந்த காலத்திலும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் கல்விக்குழு ஏறாவூரின் கல்வியின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருந்தது. குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் வெற்றியும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் வினைத்திறனும் அப்பாடசாலையின் அதிபரின் கைகளில்; தங்கியிருக்கின்றது.

அதிபர்கள் மிகச் சிறந்த ஆளுமை மிக்கவர்களாக இருப்பதன் மூலமாக பாடசாலை நிர்வாகத்தை செவ்வனே வழிநடத்த முடியும். அதிபர்கள் சிறந்த உள்ளகக் கட்டமைப்பை  பாடசாலைக்குள்ளே நிர்வகிக்கும் சிறந்த முகாமையாளர்களாக அவர்கள் தங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த முகாமைத்துவமும் தலைமைத்துவப் பண்புகளும் நேர்த்தியான உள்ளகக் கட்டமைப்பையும் கொண்டிருக்கின்ற பாடசாலைகள் ஒருபோதும் வரலாற்றில் தோல்வியைத் தழுவாது. பாடசாலைக்கு தேவையான பௌதீகவளங்களை விட, பாடசாலை நிர்வாகம் ஒரு கூட்டு ஒத்திசைவோடு இயங்குமாக இருந்தால் அதுவே அப்பாடசாலையின் வெற்றிக்கான குறிகாட்டியாக இருக்கும். பாடசாலைகளை நிர்வகிப்போர் எப்போதும் பொறுப்புக்கூறுதலுக்குக் கடமைப்பட்டிருக்க வேண்டும். தான்தோன்றித்தனமான நிர்வாக செயற்பாடுகள் அந்தப் பாடசாலையின் கல்வி அடைவு மட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தும்.

பாடசாலை பற்றிய விமர்சனங்களை இலகுவில் தட்டிக்கழித்து விட முடியாது. அதற்கு ஆக்கபூர்வமான பதிலளிக்க வேண்டியது பாடசாலை நிர்வாகத்தின் கடமையாகும். அதிபர்களின் அக்கறையற்ற தன்மை மாணவர்களினதும் ஒட்டுமொத்த சமூக எதிர்காலத்தையும் பாதிக்கும்.

பாடசாலை சீரான கட்டமைப்புக்குள் இல்லாவிட்டால், அது அந்தப் பாடசாலையின் மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
குழுநிலைப் போக்குகளை பாடசாலையில் உருவாக்க இடமளிக்காமல் நட்பும் பரஸ்பர ஒத்துழைப்பும் நிறைந்த ஆரோக்கியமான சூழலுக்கே வழிசமைக்க வேண்டும்.' என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் ஆசிரியர் வளங்களுக்குக் காணப்படும் பற்றாக்குறை பற்றியும் அதற்கான வளப் பகிர்வீடு பற்றியும் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி முன்மொழிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .