2025 மே 17, சனிக்கிழமை

தமிழை உரிய முறையில் பயன்படுத்துகின்றோமா? : வலயக்கல்விப் பணிப்பாளர்

George   / 2015 மே 21 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தமிழை பேசுகின்றோம், தமிழை எழுதுகின்றோம் தமிழில் பாடுகின்றோம், உரையாடுகின்றோம், நாடகங்கள் நடிக்கின்றோம். ஆனால், நாங்கள் எல்லோரும் தமிழை பயன்படுத்துகின்றோமா? என மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன்  குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மண்ணில் குறிப்பாக படுவான் மண்ணில் முதன்முறையாக இடம்பெறும் மாவட்ட தமிழ்தின ஆரம்ப நிகழ்வு இன்று(21) வியாழக்கிழமை முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரை நிகழ்த்திய அவர், இன்றைய நிலைமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் எமது அண்டைய நாடாகிய இந்தியாவை பொறுத்தவரை இந்திய நாட்டினுடைய பொருளாதாரத்தின் ஒரு பகுதியை தமிழ்மொழி ஈட்டிக்கொண்டிருக்கின்றது.

எந்தவொரு சினிமாவாக இருந்தாலும் மொழியை பயன்படுத்துகின்ற விதத்தில்தான் அந்த சினிமாவின் வெற்றி தங்கியுள்ளது. அதே மொழியைதான் நாம் இங்கேயும் பேசுகின்றோம். இவற்றை நாம் பயன்படுத்துகின்றோமா? இந்த மொழியை பயன்படுத்துகின்ற வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகின்ற ஒரே ஒரு நோக்கை அடிப்படையாக கொண்டுதான் நாங்கள் இந்த தமிழ் மொழித்தினத்தை பாடசாலை ரீதியாக கொண்டாடுகின்றோம்.

கிழக்கு மண்ணுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அவர்களை ஞாபகபடுத்தும் இந்நிகழ்வினை தேசிய ரீதியில் கொண்டாடுகின்ற இந்தவேளை மாவட்ட ரீதியிலே அன்னாரது அடிக்கல் நடப்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் அதே விழாவை நடத்துகின்றோம் என்றால் அன்னாரது பெருமையை கூறிக்கொண்டிருக்கின்றோம்.

உண்மையிலையே தமிழ் மொழிக்கு சிறப்பைச் சேர்த்த ஒரு கல்வியலாளன், அறிவியலாளன் விபுலானந்த அடிகள் என்பது இந்த இடத்திலே பாராட்டக்குரியது.

க.பொ.த.சாதாரண தரத்திலோ, உயர்தரத்திலோ மாணவர்கள் உயர்ந்த  பெறுபேறுகளை பெற வேண்டும் என்பதற்காக இந்த விழாவை நாங்கள் கொண்டாடவில்லை அதற்கும் அப்பால் மாணவர்கள் மத்தியிலே இருக்கின்ற திறமைகள் வெளிக்கொண்டு வரவேண்டும். மொழி மீது மாணவர்களுக்கு ஆற்றலும், ஆர்வமும் ஊட்டப்படவேண்டும். 

எந்த ஒரு துறையில் மாணவனுக்கு ஆர்வமும், ஊக்கமும் ஊட்டப்படுகின்றதோ அந்த துறையில் நிச்சயமாக அந்த மாணவன் வல்லுனராக திகழ்வான் என்பது நாங்கள் அறிந்த உண்மை அந்த வகையிலே தமிழ்மொழி மீது மாணவர்களது ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அதிகரிக்கும் நோக்கிலே கொண்டாடப்படுகின்ற இந்த தமிழ் மொழித்தினத்திலே  முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வலயங்களும் மட்டக்களப்பு மேற்கு மண்ணில், குறிப்பாக படுவான் மண்ணில் சந்திக்கின்ற ஒரு நிகழ்வாக இதனை பார்கின்றோம்.

இங்கு வந்திருக்கின்ற மாணவர்கள் நகரப்புறங்களில் வாழ்கின்றவர்கள் இங்கே வந்து, இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற இந்த இயற்கை சூழலையும், இந்த இயற்கை அமைப்பையும் எங்களது மாணவர்கள் அனுபவிக்கின்ற வசதிகளையும், வசதியீனங்களையும் அவர்களது ஆரோக்கியத்தையும் அவர்களது போசாக்கு நிலமைகளையும் பார்த்துவிட்டு செல்வதற்கு கூட இது ஏதுவாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .