2025 மே 16, வெள்ளிக்கிழமை

'ந.தே.மு. என்மீது சேறு பூசுகின்றனர்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அரசியலுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் என்மீது சேறு  பூசி வருகின்றார்கள் என்று  காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி கயா பேக்கரி ஹோட்டலில்  நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,  'நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர்  என்னை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். என்மீது சேறு பூசுவதை கைவிட்டு, மக்களுக்காக சேவை செய்ய முன்வருமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரை  நான் கேட்டுக்கொள்கின்றேன்.

'கடந்த மாதம் 15ஆம் திகதி காத்தான்குடி நகரசபை தவிசாளர்  பொறுப்பிலிருந்து இலங்கை அரசியலுக்கு அமைவாக விலகிக்கொண்டோம். நகரசபை கலைக்கப்பட்டது.

கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடியில் பழைய முறைப்படி குப்பைகளை ஒன்றுசேர்த்து அவைகளை சேகரித்து காத்தான்குடி ஆற்றங்கரையோரமாக தொடர்ச்சியாக கொட்டி வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
கடந்த முப்பது ஆண்டுகாலமாக இலங்கையில் யுத்தம் இடம்பெற்றதால், திண்மக்கழிவு அகற்றல் தொடர்பில் நிரந்தர தீர்வை  பெற்றுக்கொள்ள எந்தவொரு உள்ளூராட்சிமன்றமும் முன்வரவில்லை. மூன்று நான்கு உள்ளூராட்சிமன்றங்கள் திண்மக்கழிவு அகற்றலுக்கு நிரந்தர தீர்வை  கண்டுள்ளார்கள்.

காத்தான்குடியில் தொடர்ச்சியாக திண்மக்கழிவகற்றல் பிரச்சினை இருந்து வந்தது. நாம் காத்தான்குடி நகரசபையை 2011 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி  கையேற்றதன் பின்னர், காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை  காணவேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தோம்.

திண்மக்கழிவகற்றல் திட்டத்தில் குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். தரம் பிரித்த குப்பைகளை மீள்சுழற்சி செய்து பசளையாக வெளியாக்க வேண்டும். ஏனைய குப்பைகளை நவீனமான முறையில் தொழில்நுட்ப ரீதியாக இடத்தினை அமைத்து அங்கு அதைப் போட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தினை எடுத்தோம். ஆனால், அதற்கு காணிகள் தேவைப்பட்டது. காத்தான்குடி நகரசபை எல்லைக்குள்ளேய காணியை அடையாளப்படுத்தி அதற்காக காத்தான்குடியிலுள்ள பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா ஆகியவற்றின் உதவியுடன் நிதியைப் பெற்று 110 பேர்ச் காணியினை பல சவால்களுக்கு மத்தியில் கொள்வனவு செய்து தந்தார்கள்.

மிகுதியாக 5 ஏக்கர் காணியினை அதே இடத்தில் காத்தான்குடி நகர சபையின் நிதியுதவிடன் கொள்வனவு செய்தோம். தற்போது அந்த இடத்தில் இயற்கை பசளை தயாரிக்கும் நிலையத்தினை பிலிசறு நிறுவனத்தின் உதவியுடன் 87 இலட்சம் ரூபாய் செலவில் அதனை அமைத்து அதை வெற்றி கரமாக செயற்படுத்தினொம்.

அத்தோடு யுனெப்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் திண்மக்கழிவகற்றலை மேம்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
நான் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் நகர சபை உத்தியோகத்தர்கள் காத்தான்குடி நகர சபை எல்லையிலுள்ள வீடுகளுக்குச் சென்று இந்த குப்பைகளை தரம் பிரித்து தாருங்கள் என்று கேட்டோம். இதற்கு காத்தான்குடியிலுள்ள 75 வீதமான மக்கள் ஒத்துழைப்பு வழங்கி குப்பைகளை தரம் பிரித்து தற்போதும் தந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை வைத்து பசளை தயாரிக்கப்பட்டு அந்த பசளை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு அது தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

இவை எல்லாம் செய்து வந்த நிலையில் மிகுதியான குப்பைகளை காத்தான்குடி ஆற்றங்கரை யோரம் கொட்டி வந்தோம். அந்த குப்பைகளை நிரந்தரமாக  கொட்டுவதற்கு யுனப்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கொடுவாமடு பிரதேசத்தில் தொழில்நுட்ப ரீதியான ஒரு இடத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது எதிர் வரும் 9ம் மாதம் முடிவடையும்.
மிகுதியாக வரும் குப்பைகளை அங்கு கொண்டு செல்வதற்கு யுனெப்ஸ் நிறுவனம் வாகனமும் கொள்வனவு செய்துள்ளது.  அதற்கான இடம் எதிர் வரும் 9ம் மாதம் அமைக்கப்பட்டு முடிந்தவுடன் அங்கு கொண்டு போய் கொட்டுவார்கள்
இது தான் நிரந்தர தீர்வாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.  திண்மக்கழிவகற்றல் என்பது குப்பைகளை தரம் பிரித்தல், அதை மீள் சுழற்சி செய்தல் மிகுதியான கழிவுகளை தொழில்நுட்ப ரீதியாக அமைக்கப்படும் இடத்தில் கொட்டுவது. இதுதான் இதற்கான நிரந்தர தீர்வாகும்.

இவைகளை பல சவால்களுக்கு மத்தியில் நாம் மேற்கொண்டோம். அனைவரினது பங்களிப்புடனேயே இவைகளை நாம் மேற்கொண்டோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .