2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இருவேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காத்தான்குடி நகரசபை பிரிவுக்குட்பட்ட  றிஸ்வி நகர் கடற்கரையோரத்தில்  குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரையோரத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக காத்தான்குடி நகரசபையினர் இன்று  வியாழக்கிழமை காலை  சென்றனர். இதன்போது ஒன்றுதிரண்ட பிரதேசவாசிகள்,  இங்கு   குப்பைகளை கொட்டவேண்டாமென்று  தெரிவித்து,  குப்பைகளை ஏற்றிவந்த வாகனத்தையும்  வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற  காத்தான்குடி நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி பொலிஸார் ஆகியோர் பிரதேசவாசிகளுடன்  கலந்துரையாடினர்

இவ்விடத்தில் குப்பைகளை கொட்டினால்; சூழல் மாசடைவதுடன், பல்வேறு தொற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகும் அச்சுறுத்தலும் நிலவுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குப்பைகளை ஏற்றி வந்த வாகனங்கள் நகர சபையின் செயலாளரின் உத்தரவுக்கமைய திரும்பிச் சென்றன.
இதேவேளை,  குப்பைகளை கொட்டுவதற்கு காத்தான்குடியில்  காணியொன்றை பெற்றுத்தருமாறு கோரி காத்தான்குடி பிரதான வீதியின் நடுவில் குப்பைகளை குவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடியில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உக்காத குப்பைகள் காத்தான்குடி ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டு வந்த நிலையில் அவ்விடத்தில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது

இதையடுத்து குப்பைகளை  கொட்டுவதற்கு இடமில்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு வாரங்களாக காத்தான்குடி நகரசபையினால் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கலந்துகொண்டனர்.

இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகைதந்த காத்தான்குடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம்.தஸாநாயக்கா எதிர்வரும் சனிக்கிழமைக்குள் இப்பிரச்சினைக்கான  தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .