2025 மே 16, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்கள் அறிவு யுத்தம் செய்கின்றார்கள்: நிஸாம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வடபகுதியிலிருந்து வெளியேறிய  தமிழ் மக்கள் இப்பொழுது உலகம் பூராகவும் அறிவு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்தத்தின் விளைவாக வடபகுதியிலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும்  வெளியேறினர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்கள் நாட்டின் நாலாதிசைகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். அதேவேளை, வடக்கிலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள்  நாடு கடந்து அகதிகளானார்கள். அகதி அந்தஸ்தோடு உலகம் முழுவதும் வியாபித்தார்கள்.

அவர்கள் வெறுங்கையோடு நாடு கடந்து செல்லும்போது அறிவை மட்டும் நம்பினார்கள். அறிவு மட்டுமே தங்களை பாதுகாக்கும் என்று அவர்கள் அன்று நம்பியது இன்று வீண்போகவில்லை. அவர்கள் புலம்பெயர்ந்து போன தேசமெல்லாம் அறிவைத் தேடினார்கள்.அதன் காரணமாக மிகச் சிறந்த புத்திஜீவிகளாக மாறியிருக்கின்றார்கள்.

இப்பொழுது அவர்கள் ஆயுத யுத்தம் செய்பவர்களாக அன்றி அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக இந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது உலகம் முழுவதும் வியாபித்துள்ள தமிழர்களின் அறிவுப் பல தந்திரோபாயத்தில் உலகம் சிக்குண்டிருக்கின்றது. அதனால் புலம்பெயர் தமிழர்களது வாழ்க்கை, திட்டமிடல், எதிர்காலம் எல்லாமே ஒரு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அதேவேளை, இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ் நிலைகள், இருப்புக்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை அறிவார்ந்த முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பரந்திருக்கின்றார்கள் என்றால் அதற்கான பதில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அதனால் முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கல்விப் புரட்சியை ஏற்படுத்துகின்ற ஒரு சமூகமாக மாற வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .