2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எமது சமூகமே முக்கியம்: ரிசாட்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 03:54 - 1     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


தங்களுக்கு அமைச்சுப்பதவி முக்கியம் அல்ல என்பதுடன், தமது சமூகமே முக்கியம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதனாலேயே, அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சமூகத்துக்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமூகத்துக்கு நடந்த அநீதியை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதனால், வெளியேறுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடியில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் இல்லத்தில் வியாழக்கிழமை  (25) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த 2005ஆம் மற்றும் 2010ம் ஆண்டு காலப்பகுதிகளில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்கு  கடுமையாக உழைத்தோம். சமாதானத்தை கொண்டுவந்துவிட்டார். அவருக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும் என்று நாடு முழுக்க அலைந்துதிரிந்து பிரசாரம் செய்தேன். அன்று நாங்கள் செய்த பிரசாரம் ஜனாதிபதிக்கு, அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்கு தெரியும்.

அதன் பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பழைய நிலையை மாற்றிக்கொண்டார். தான் நினைத்ததை செய்தார். தன்னோடு போட்டி போட்ட ஜனநாயக கட்சித் தலைவர்  சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தார். முன்னாள் பிரதம நீதியரசர்  சிராணி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பினார்.

நாங்கள் அரசாங்கத்திலிருந்தாலும், மனச்சாட்சிக்கு இடங்கொடுக்காத விடயங்களுக்கு கூட உடன்படவேண்டிய தேவைப்பாடு இருந்தது. நாங்கள் உருவாக்கிய ஒருவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கின்றார் என்ற காரணத்துக்காக  நாங்கள் பொறுமையாக இருந்தோம்.

அளுத்கமவில்  இறுதியாக முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநியாங்கள் தெரியும். பரிதாபமாக உயிர்கள் பலியாகின. 1983ஆம் ஆண்டு கலவரத்துக்கு  பின்னர் அளுத்கம கலவரம் பெரிய கலவரம் எனவும் முஸ்லிம்கள் மீது காட்டிய அட்டகாசத்தையும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததையும் நான் அமைச்சரவையில் ஜனதிபதிக்கு எடுத்துக்கூறினேன். அப்போது ஜனாதிபதி என்னுடன் முரண்பட்டார்.

நான் அமைச்சரவையில் இது விடயமாக பேசும்போது, முஸ்லிம அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், நான் தைரியமாக  பேசினேன்.

இந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக அனைவரும் மாற்றத்துக்காக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கவேண்டும். அனைத்து முஸ்லிம்களும் மாற்றத்துக்காக தமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தவேண்டும்.  இந்தத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு பொது எதிரணி வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும்.

எங்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்கமுடியாது. இருக்கின்ற அமைச்சுக்களை விட, இன்னும் அமைச்சுக்களை தருவார்கள். அதுவல்ல எங்களுக்கு முக்கியம். எங்களது சமூகம் முக்கியம். எங்களது மார்க்கம் முக்கியம்.  எங்களது குர்ஆன் எமது சமூகத்தின் எதிர்காலம் முக்கியம். இதனாலேயே  எல்லாவற்றையும் இழந்துவிட்டு வெளியேறியிருக்கின்றோம்' என்றார்.

இதேவேளை, ஏறாவூருக்கு வியாழக்கிழமை (25) மாலை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன், ஏறாவூர் புன்னைக்குடாவில் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றினார்.


  Comments - 1

  • Rinash mohideen Friday, 28 December 2018 01:50 AM

    மா ஷா அல்லாஹ் எமது வன்னி ஈன்ற தங்க தலைவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X