2025 மே 14, புதன்கிழமை

எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள்; மனைவி சாட்சியம் அளிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்சக்திவேல்

பொலிஸ் சீருடையில் வந்த ஒருவரும் சாதாரண உடையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினருமே  வீட்டிலிருந்த எனது கணவரை விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறி வெள்ளை வானில் அழைத்துச்சென்றனர். இதன் பின்னர் எனது கணவர் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் மகிழூரைச் சேர்ந்த ரவீந்திரன் சிறிதேவி சாட்சியம் அளித்தார்.  

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மூன்றாவது விசாரணை அமர்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.   

இங்கு தொடர்;ந்து சாட்சியம் அளித்த அவர், 'எனது கணவர் ஓர் அரசாங்க உத்தியோகஸ்தர். அவர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சமூர்த்தி உதவி முகாமையாளராக கடமையாற்றி வந்திருந்தார்.

2009.04.08 அன்று எனது கணவர் வீட்டிலிருந்தார். அன்றையதினம் காலை ஒன்பது மணியளவில் எனது வீட்டைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் காணப்பட்டனர். இதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் வெள்ளை வானில் பொலிஸ் சீருடை அணிந்திருந்த ஒருவரும் அவருடன் சாதாரண உடை அணிந்திருந்த நான்கு பேரும் வந்தனர். அவ்வேளையில் எனது கணவர் வீட்டிலிருந்தார்;. இவ்வாறு வந்தவர்கள் எனது கணவரை அழைத்து  நீங்கள் ரவீந்திரனா என்று கேட்டனர். அதற்கு அவர் ஆம் என்று பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து, உங்களிடம் சிறு விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சேட் அணிந்துகொண்டு வாருங்கள் என்று அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் எனது கணவரை நான் இன்னும் காணவில்லை.

இது சம்பந்தமாக  பொலிஸ் நிலையத்துக்குச்  சென்று நான் முறைப்பாடு செய்தேன். ஆனால், முறைப்பாட்டு பிரதியை நான் எடுக்கவில்லை. காரணம் எனது கணவர் வீட்டிலிருந்து காணமல் போயுள்ளார் என்று நான் தெரிவித்திருந்தேன்;. ஆனால், அவர்கள் வெளியில் சென்ற வேளை காணமல் போனதாக முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். இதனால் நான் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.  மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்திருந்தேன்' என சாட்சியம் அளித்தார்.   எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தயவுசெய்து எனது கணவரை கண்டுபிடித்துத்தாருங்கள்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .