2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யானை விரட்ட ‘பட்டதாரிகளை பயன்படுத்த முடியாது’

Gavitha   / 2017 மார்ச் 13 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

“மக்களையும் பயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான செயற்பாட்டை வனஜீவராசிகள் திணைக்களம் தான் முன்னெடுக்க வேண்டும்” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், “யானைகளை விரட்ட பட்டதாரிகளைப் பயன்படுத்த முடியாது” என்றும் சுட்டிக் காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான சிறுபோக ஆரம்பக் கூட்டத்தில் யானைப் பிரச்சனைகுறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

யானைப் பிரச்சினையைத் தடுப்பதற்கு வேலையற்ற பட்டதாரிகளைப் பயன்படுத்தலாம் என்று விவசாயி ஒருவர் கருத்து வெளியிட்டமை குறித்து விளக்கமளிக்கையிலேயே சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தம்பி ஒருவர், யானைப் பிரச்சினையில் வேலையற்ற பட்டதாரிகளைப் பற்றிச் சொன்னார். வேலையற்ற பட்டதாரிகள் என்பவர்கள் சாதாரண தரம், உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டங்களை நிறைவு செய்தவர்கள். நீங்கள் சொன்னது போல் தொழில்வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அவர்களை யானை விரட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது அவர்களை அவமானப்படுத்துவதாகும். தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டால் மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  

தொழில்வாய்ப்பென்ற விடயத்தில் ஏற்கெனவே ஜனாதிபதியிடம் பேசப்பட்ட போது, வடக்குப் பட்டதாரிகள் கிழக்குப் பட்டதாரிகள் என்ற பாகுபாடு இல்லாமல், கிழக்குப் பட்டதாரிகள் நேரடியாகச் சென்று சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.  

அவர்கள், இங்கிருந்து சிலர் வருகை தருவதற்கு முடியாது என்று கூறுகின்றனர். பட்டதாரிகளிடம் சென்று கலந்துரையாடிய போது அவர்கள் பல விடயங்களில் அவசரப்படுகிறார்கள். சில விடயங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதை விட ஏதோ வெல்லாம் குற்றச்சாட்டுக்களைச் சொல்கிறார்கள்  

இன்னும் ஒரு விடயம் எல்லாப்பட்டதாரிகளுக்கும் ஒரே தடவையில் வேலைகள் வழங்கப்படும் என்பது எதிர்பாரக்க முடியாத விடயம். அதற்காகத்தான் சில சில முறைமைகளை கையாள்கிறார்கள். சிலர் சொல்வது போல் தொழில்   இருந்தால் பரவாயில்லை. சாதாரண தரம், உயர்தரம் படித்தவர்களுக்குத் தொழில் கொடுக்காமல் பட்டம் முடித்தவர்களுக்கு தொழில்களை வழங்கலாம். ஆனால், சிற்றூழியர்களாக பட்டதாரிகளை நியமிக்க முடியாது. எனவே இந்த விடயத்தினை நாங்கள் கவனமாகத்தான் கையாளவேணடியிருக்கிறது. உங்களது கஷ்டம் எங்களுக்கு விளங்குகிறது.   யானைகளை, பாதுகாப்பு வேலிகளுக்கு அப்பால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டுள்ள கட்டத்தினைப்பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .