2025 மே 19, திங்கட்கிழமை

’23இல் தீர்வு வேண்டும் இல்லையேல் பணிப்பகிஷ்கரிப்பு விரிவடையும்’

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா, எம் எஸ் அப்துல் ஹலீம்

 

“எதிர்வரும் 23ஆம் திகதி, எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிடின், நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துவோம்” என, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர்எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (17) கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவானது, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளையும் ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட, இன்னும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்கும் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என, அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தப் போராட்டத்தை நடத்திவருகின்றோம்.

“எமது கல்விசார ஊழியர் சங்கமும் இக்கவனஈர்ப்புப் போராட்டத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவு, ஊழியர் வைத்தியக் காப்புறுதி, ஓய்வூதியம், ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் சொத்துக்கடன் எல்லையை 02 மில்லியனாக அதிகரித்தல், மொழிக்கொடுப்பனவை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக்கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

“இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும், உரிய அமைச்சுடன் 23 ஆம் திகதி பேசி இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கான தீர்வு, எதிர்வரும் 23ஆம் திகதி கிடைக்காவிட்டால், நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் கடுமையான தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X