2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் 5 இலட்சம் பேர் பாதிப்பு

Gavitha   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (26) மாலை எடுக்கப்பட்ட தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 136,949 குடும்பங்களைச் சேர்ந்த 488,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 60,142 குடும்பங்களைச் சேர்ந்த 214,736 பேர் இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

பிரதேசத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவிகள் பெருக்ககெடுத்து, அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் வீதி வழியாகவும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு நகரிலுள்ள போக்குவரத்து பஸ் தரிப்பு நிலைய வளாகம் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பஸ் தரிப்பிடத்தை தற்காலிகமாக மட்டக்களப்பு நகருக்கு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின், பல கிராமங்களுக்கான தரை வழி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமையால், அங்கு கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் படகுகள் சேவைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளத்தின் 3  வான்கதவுகளும் றூகம் குளத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல குளங்களும் கட்டுப்பாட்டிலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்;ப்பாசனப்பணிப்பாளர் கே.மோகனராஜா தெரிவித்தார்  

இதேவேளை கடந்த 24 மணித்தியாலயங்களில் 101.1 மி.மீ மழை பெய்துள்ளதுடன், றூகம் பகுதியில் 104.6 மி.மீ மழையும் பாசிக்குடா பகுதியில் 117.5 மி.மீ மழையும் பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு – பொலன்னறுவைக்கான வாகனப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X