2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

51 பேருக்கு விவசாய உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  சேனை பயிர்ச்செய்கையாளர்கள்  மற்றும் வீட்டுத்தோட்டம் செய்கையாளர்கள் 51 பேருக்கு  விவசாய உபகரணங்கள் இன்று திங்கட்கிழமை (17)  வழங்கப்பட்டதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள், முட்கம்பிகள், தெளிகருவிகள், சேதனப்பசளை உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் ஐயங்கேணி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி.பைஸர்கான் இவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி.பைஸர்கான் தெரிவிக்கையில்,

'அரசோ நிறுவனங்களோ இனி எமக்கு உதவத் தேவையில்லை என்ற நிலைக்கு நீங்கள் உங்களுக்கு தரும் வாழ்வாதார உதவிகளைக்கொண்டு முன்னேற வேண்டும். பிறக்கும்போது வறுமையாகப் பிறப்பது தவறல்ல. ஆனால், எம்மைச் சூழ்ந்து இத்தனை இயற்கை வளங்களும் இருக்கத்தக்கதாக இறக்கும்போது, வறுமையுடனே ஒருவர் இறப்பதென்பது அது அவரின் தவறேயன்றி வேறொன்றுமில்லை.

நாம் தரும் வாழ்வாதாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒருபகுதியை எதிர்கால செல்வங்களான சிறார்களின் கல்விக்காக செலவு செய்வதற்காக ஒதுக்குங்கள்.' எனக் கூறினார்.

இங்கு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவிக்கையில்,

'ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சேவை செய்ய முன்வருவதில்லை. காரணம் இந்த பிரதேச செயலாளர் பிரிவு நகர பிரதேச செயலாளர் பிரிவு என்பதால், இங்குள்ள எல்லோரும் நகர மக்கள், அவர்கள் முன்னேற்றம் அடைந்தவர்கள் என்கின்ற கணிப்பு நிறுவனங்களிடமும் உள்ளன.

ஆனால், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் அடிமட்ட வறுமைக்குட்பட்ட கிராமங்கள் அதிகம் உள்ளன. அத்தகைய கிராமங்களை முஸ்லிம் எய்ட் நிறுவனம் அடையாளம் கண்டு வறுமைக் கோட்டுக்குள் உள்ளவர்களைத் தெரிவுசெய்து பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு வாழ்வாதார உதவிகளையும் வீட்டு வசதிகளையும் கல்வி அபிவிருத்தியிலும் உதவிகளை வழங்கி வருகின்றன.

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் மூலம் வறுமைப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

அதேவேளை, நிறுவனங்களும் அரசும் சதாகாலமும் உதவிக்கொண்டிருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பை தொடர்ந்தும் வறுமைப்பட்ட மக்கள் வளர்த்துக்கொள்ளக் கூடாது. கிடைத்தவற்றைக் கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும். வழங்கப்படுகின்ற உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி வளம்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு' எனக் கூறினார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி.பைஸர்கான,; ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம், முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி, சிரேஷ்ட திட்ட அதிகாரி பைஷர் தாஸிம், விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், விவசாயப் போதனாசிரியை எம்.ஐ.முர்ஷிதா ஷிரீன், வாழ்வாதார திட்ட உத்தியோகஸ்தர் எச்.ஏ.டில்ஷாத்  உள்ளிட்டோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X