2026 மே 14, வியாழக்கிழமை

60 மில்லியன் ரூபாய் செலவில் கட்டட நிர்மாண பணிகள்

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, உயர் தேசிய கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டட நிர்மாண பணிகள் சுமார் 60 மில்லியன் ரூபாய்கள் செலவில் தற்போது நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் காலத்தில் உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்ள தமது கற்கைகள் நிறுவகத்தில் மேலதிக பாடநெறிகளை  ஆரம்பிக்கவுள்ளதாகவும் நிறுவகத்தின் கல்வி சார் இணைப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் தெரிவித்தார்.

உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு உயர் தேசிய கற்கைகள் நிறுவகத்தின் கல்வி, மற்றும் அபிவிருத்தி வேலைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'மட்டக்களப்பில் 1986ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயர் தேசிய கற்கைகள் நிறுவகம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரியிலேயே இயங்கி வந்தது.

இருப்பினும் அவ்வேளைகளில்  ஏற்பட்ட இடபிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக கடந்த 2011ஆம் அண்டு ஜுலை மாதம் முதல் தாளங்குடாவிலுள்ள இவ் இடத்திற்கு தற்காலிக கட்டடங்களுடன் இடம்மாறினோம்.

தற்போது புதிய கட்டடத்தின் முதலாவது கட்ட வேலைகள் முடிவடைந்து வருகின்றன. அத்துடன் இரண்டாவது கட்ட வேலைகளுக்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எமது நிறுவகத்தில் தற்போதைய நிலையில், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா ஆகிய கற்கை நெறிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 450 மாணவர்கள் பகுதி நேர, முழுநேர வகுப்புகளில் கற்று வருகிறார்கள்.
உயர் தேசிய கற்கைகள் நிறுவகத்தில் 15 இற்கு மேற்பட்ட பாடநெறிகள் இருந்தாலும் தற்போது இரண்டு கற்கை நெறிகளே எமது மட்டக்களப்பு நிறுவகத்தில் நடைபெற்று வருகின்றன.

எமது நிறுவகத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களே கல்வி கற்கின்றனர்.

அண்மையில், நடைபெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான 'திறமை'  போட்டியில், எமது நிறுவகத்தின் குறும்படத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்திருந்தது. அதேநேரம், அரை இறுதி போட்டிக்கு 4 பேர் தெரிவாகியிருந்தனர். இப் போட்டியில் எமது நிறுவனம் மாத்திரமே இறுதிப் போட்டியில் பரிசு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மிகத்திறமையான மாணவர்களைக் கொண்டுள்ள எமது மாவட்டத்தில் பொறியியல், தொழில்நுட்பவியல், தகவல் தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் கற்கை நெறிகளை விரைவில் ஆரம்பிக்க ஆவன செய்யத் தயாராக உள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .