2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அதிருப்தியில் வைத்தியர்கள்; தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் முனைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பில், தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாணக் கிளை ஒன்றியம், இது தொடர்பில் தாம் அதிருப்தியில் உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.

இது விடயமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ஏ.எல்.என். லியனகே, தகவல் தொடர்பு அதிகாரிகளான வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட், வைத்தியர் எம். ரூபராஜன் ஆகியோர், இன்று (25) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், அவர்களது நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநருடன், தமது பிரதிநிதிகள், இம்மாதம் 10ஆம் திகதி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக, அரச வைத்தியர்களுக்கு, இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிகக் கொடுப்பனவுகளில், இதுவரை வழங்கப்படாதுள்ள எஞ்சியுள்ள கொடுப்பனவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வழங்குவதற்கும்; மே மாதத்துக்குரிய சம்பளப் பட்டியலில், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு சேர்த்துக் கொள்ளப்படும் என, கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும், ஆளுநரால் பணிப்புரை விடுவிக்கப்பட்டிருந்தது என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இப்பணிப்புரைப்படி, கிழக்கு மாகாண அரச வைத்தியர்களுக்கு, இதுவரை எதுவிதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் அவர்கள், மே மாதத்துக்கான கொடுப்பனவு, புதிய சுற்றறிக்கைப்படி வழங்கப்படுவது தொடர்பில், உறுதியற்ற நிலைமையிலேயே காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

“ஆரம்பம் முதலே இது சம்பந்தமாக கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்திருந்தும் அது இன்னமும் அமுல்படுத்தப்படாமல் இருப்பதற்கு, அவருடைய பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடு, வினைத்திறனற்ற தன்மை காரணங்களாக அமைகின்றதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது" எனக் குற்றஞ்சாட்டிய அவர்கள், “எனவே, இக்கொடுப்பனவு விடயத்தில், கிழக்கு மாகாண அதிகாரிகள் இதை விட முன்னுரிமை அளித்து செயற்பட்டிருத்தல் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலதிகமாக, கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில், தகுதிவாய்ந்த வைத்திய நிர்வாகிகளுக்கான பற்றாக்குறை நிலவுகிறது எனத் தெரிவிக்கும் அவர்கள், இதன் காரணமாக, வைத்தியசாலைகளின் செயற்பாடு, வைத்திய அதிகாரிகளின் பாதுகாப்பு, நோயாளர்களுக்கான சேவைகள் என்பவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கின்றனர்.

“இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2018-04-26ஆம் திகதிக்கு முன்னர், வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் எஞ்சிய கொடுப்பனவுகள் முற்றாக வழங்கப்படுதல் வேண்டும்.

“மேலும் வைத்திய நிர்வாகிகளின் சரியான நியமனங்கள், 2018-04-26ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

“மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து, கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கக் கிளைகளின் கூட்டமைப்பானது, தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது” என, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X