2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அரசியல் தீர்வு ‘இழுத்தடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 மே 16 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலை காணப்பட்டால், அரசாங்கம்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
“அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில், அரசாங்கத்துடன் நாம் கலந்துரையாடி வருகின்றோம். அரசியல் தீர்வு கிடைத்தால், சிறுபான்மை மக்களது தேசிய இனப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கரடியனாறு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு, நேற்று(15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஞா.சிறிநேசன் எம்.பி, கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் ரீதியான கடத்தல், கொலை போன்ற நிலைமை தற்போது இல்லை எனத் தெரிவித்தார். எனினும், அரசியல் தீர்வு முன்னெடுப்பின் வேகம் குறைவாகவே இருக்கிறது என்றும் அவர் விமர்சனத்தை முன்வைத்தார்.
“தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவோர் அரசாங்கத்துடனும் இணக்கமாகக் கலந்துரையாடி தீர்வைக் காண முடியாது என்ற நிலைப்பாடு ஏற்படும். இனிவரும் காலங்களில், சர்வதேசத்தின் உதவியை நாடுவதற்கு, எமது தற்போதைய முயற்சி உதவியாக அமையும்” என்றார்.
வித்தியாலய அதிபர் ஆர்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X