2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“எதிர்ப்பட்டதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு போவதை விட, உள்ளதில் நல்லதைத் தெரிவு செய்யும் ஆற்றலை சிறுபான்மையினர் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று (12) தெரிவித்தார்.

திருத்தங்களுடனான 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தமைப் பற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“சிறுபான்மைச் சமூகம் அதற்கு ஏற்பட்ட கடந்த கால இழப்புகள், பல்லினக் கலாசார பண்பாடுகள், விழுமியப் பண்புகள் மற்றும் 30 வருடகால இழப்புக்களில் இருந்து மீண்டெழும் தன்மை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு தமது போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

“அரசியலில் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்பது, தட்டிக் கழிப்பது, தான்தோன்றித் தனமாக நடந்துகொள்வது, வீறாப்புப் பேசி வீண்பெருமை அடிப்பது இதுவெல்லாம் சமகால உலக நடப்புகளுடன் ஒத்துப்போகாத விடயங்களாக உள்ளன. இத்தகைய போக்குகளால், கடந்த காலத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் இழந்ததும் ஏராளம்.

“எனவே, எமது தனித்துவத்தைப் பாதுகாக்கின்ற அதேவேளை, நடப்பு உலகப் போக்குகளை உணர்ந்து செயற்பட்டு, எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும்.

“எல்லாவற்றையும் எதிர்க்கும் மனோபாவத்தை விட இருப்பதில் நல்லதை அங்கிகரிக்கும் மனோபாவம் எல்லோரையும் வாழவைக்கும். இது பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

“விட்டுக் கொடுப்புகளோடு நல்லதைச் சிந்திக்கின்ற அதேவேளையிலே, சிறுபான்மைச் சமூகம் அறிவார்ந்த அரசியல் முன்னெடுப்புக்களினூடாக ஒரு படியிலாவது ஏறி முதலில் கால் வைக்கவேண்டும். அதை விடுத்து, எடுத்தேன் - கவிழ்த்தேன் போக்கில் தற்போது இருக்கும் படிக்கட்டில் இருந்தும் கீழிறங்கி ஏறவே முடியாத ஒரு நிலைக்குச் சென்று விடக் கூடாது.

“சிறுபான்மை இனம் தொடர்ந்தும் எதிர்த்து நிற்கும் போக்கைக் கடைப்பிடித்தால், திட்டமிட்டவகையில் சிறுபான்மையினருக்கான தீர்வு இழுத்தடிக்கப்படலாம். அத்தகைய ஒரு சூழ்நிலையை நாமாக அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடக் கூடாது.

“கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போதைய நல்லாட்சியின் பக்கம் சார்ந்து நமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை விட வேறு தெரிவு நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை” என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X