2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆலயங்களுக்கும் கடவுளுக்கும் காவலாளிகள் தேவை: அரியநேத்திரன்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இன்றைய நல்லாட்சியிலும் இந்து ஆலயங்களுக்கும் கடவுளுக்கும் காவலாளிகள் தேவைப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் கடந்த வெள்ளிக்கிழமை உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்க நேற்று(25) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'சில விசமிகள், குருக்கள்மடம் விஷ்ணு ஆலயத்திலும் வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்திலும் உள்ள விக்கிரகங்களை திட்டமிட்டு சேதப்படுத்திய செயலானது ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது.

மஹிந்த ஆட்சியிலும் இவ்வாறே இந்து ஆலயங்களிலுள்ள விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டன.  குருக்கள்மடம் முருகன் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம் மற்றும் பல ஆலயங்களிலுள்ள  விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் இவ்வாறான திட்டமிட்ட செயல்களை செய்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கூறியபோதும் அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் மஹிந்த ஆட்சியில் முன்னெடுக்கப்படவில்லை.   

இதனை கண்டித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாம், மட்டக்களப்பு மாங்காட்டில் இருந்து குருக்கள்மடம் வரையும் கவனஈர்ப்பு ஊர்வலத்தையும் நடத்தினோம். முன்னைய மஹிந்த ஆட்சியிலுள்ள படையினர் இவ் ஊர்வலத்தை தடுக்க முற்பட்டனரே தவிர விக்கிரகங்கள் உடைப்பில் சம்பந்தப்பட்ட எவரையும் கைதுசெய்ய முன்வரவில்லை.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.  மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி நல்லாட்சி என வாயால் மட்டும் கூறும் சொல்லாட்சியிலும்  இந்துக் கோயில்களின் விக்கிரகங்கள் உடைக்கப்படுமானால் இதற்கான சூத்திரதாரிகளை கைதுசெய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உரியது.

இந்து ஆலயங்களிலுள்ள விக்கிரகங்களை சேதப்படுத்தும் விசமிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் உடனடியாக ஈடுபடவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால்  கடவுளுக்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டி வருமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X