2026 மே 09, சனிக்கிழமை

இரட்டை படுகொலை விசாரணையை சீ.ஐ.டீக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணையை, பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்துமாறு, உயிரிழந்த மகளின் கணவர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர், தனது தரப்பு சட்டத்தரணியுடன், நீதிபதியின் முன்னால் ஆஜராகி, மேற்படி வேண்டுகோளை முன் வைத்தார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணையில், தனக்குத் திருப்தியில்லாதிருப்பதாக, தனது வேண்டுகோளை சட்டத்தரணியூடாக நீதிபதியின் கவனத்துக்கு அவர் கொண்டு வந்தார்.

படுகொலைச்  சந்தேகநபர்களில் இருவர், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை, பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களில் இருவரையும் டிசெம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும், கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் நீடிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் இருவர் கடந்த செப்டெம்பர் மாதத்திலும் மற்றைய இருவரும் ஒக்டோபர் மாதத்திலும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .