2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உயர்தர வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி

Editorial   / 2023 ஜனவரி 08 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஏ.எச்.ஏ ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடலில் மூழ்கி உயிரிழந்த, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கற்கும் மாணவனான மனாப்தீன் அப்துர் றஹ்மான் (வயது 19) என்பவரின் சடலம், சனிக்கிழமை (06)  மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றவுள்ள இம்மாணவனும் அவரது குடும்பத்தினரும் சனிக்கிழமை (07) சவுக்கடி கடற்கரைக்குச் சென்று, தனது சகோதரருடன் கடலில்  குளித்துக் கொண்டிருக்கும்போது, பாரிய அலையொன்றால் இருவரும் அள்ளுண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சற்று நேரத்தில் கடற்கரையை நோக்கி வந்த பாரிய அலையின் மூலம், கடலில் மூழ்கிய இருவரும் கரையொதுங்கினர். அவ்வேளையில், அப்துர் றஹ்மான் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளார். இவரது சகோதரரான உபைதீன் றஹ்மான் (வயது 17) உயிருக்குப் போராடிய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரணமடைந்த மாணவனின் தந்தை மூன்றரை வருடங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (06) மாலைதான் கட்டாரிலிருந்து வீடு திரும்பியிருந்த நிலையில், சனிக்கிழமை காலை குடும்ப சகிதம் சவுக்கடி கடற்கரைக்கு சென்ற போதுதான் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்த  மனாப்தீன் அப்துர் ரஹ்மானின் மரண விசாரணைகளை, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் முன்னெடுத்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .