Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 16 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தச் செலவுகள், கெடுபிடி நெருக்கடிகள், பாரிய அபிவிருத்திகள் ஆகியன இல்லாத சூழ்நிலையில், எரிபொருள் விலையேற்றம் எதற்கு எனக் கேள்வியெழுப்பிய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதையே இது காட்டுகிறது எனவும் சாடினார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றம், அதைத் தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சூழ்நிலை தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரால் இன்று (16) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, இவ்விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
“நல்லாட்சி என நம்பி, இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்களில் அநேகமானோர், பாட்டாளி வர்க்கத்தினர்தான். ஆனால், பாட்டாளி மக்களுக்கான திட்டமிட்ட உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் எதனையும், இந்த அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. அதுபற்றிச் சிந்திக்கவும் இல்லை" என அவர் விமர்சித்தார்.
நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் மனித வளம் பயன்படுத்தப்படாததால், அவர்கள் புலம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நாட்டு வளங்கள், சர்வதேசத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் தாரை வார்க்கப்படுகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்.
இவற்றுக்கு மத்தியில், ஏழைகள் மீதே வரி அறவிடப்படுகின்றது என்று தெரிவித்த அவர், "எடுத்ததற்கெல்லாம் வரி அறவிடும் வங்குரோத்துப் பொருளாதார நிலையில், அரசாங்கம் தடுமாறுகிறது" என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “இப்பொழுது நாட்டில் யுத்தம் இடம்பெறவில்லை. எனவே, யுத்தத்துக்குச் செலவளிக்கப்பட்ட நிதி, அபிவிருத்திக்குச் செலவு செய்யப்படலாம். ஆனால், தூர நோக்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் அரசாங்கத்திடமில்லை" என்று தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, அனைத்துப் பொருட்களின் மறைமுக விலையேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடும் என்பது, அரசாங்கத்துக்குத் தெரியாவிட்டாலும் அடிமட்ட மக்களுக்கு நன்கு தெரியும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறான ஒன்றாகவே, போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
அதேபோல், தனியார் பஸ் உரிமையாளர்களால், வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், “அரசாங்கம் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறது என்பதை, நடப்பு நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
17 May 2025