2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காணி மோசடி செய்யப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மே 03 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,   எம்.எம்.அஹமட் அனாம்
 

மட்டக்களப்பு, கோறளைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ஸ்ரீகைலாயப் பிள்ளையார் முத்துமாரியம்மன் கோவில் பரிபாலன சபைக்குச் சொந்தமான காணி மோசடி செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அக்காணியை மீட்டுத் தருமாறு கோரியும் வாழைச்சேனையில் இன்று ஆர்ப்பாட்டத்துடன், கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
 
வாழைச்சேனை ஸ்ரீகைலாயப் பிள்ளையார் முத்துமாரியம்மன கோவில் பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்; கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்;திச் சங்கம், இளைஞர் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 
கோவில் முன்றலிலிருந்து பேரணி ஆரம்பமாகி  கோறளைப்பற்றுப் பிரதேச சபைவரை சென்றதுடன்,  பிரதேச சபை முன்றலில் ஆர்ப்பாட்டமும்; இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கோறறைப்பற்றுப் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிகாப்தீனிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மாவட்டச் செயலாளருக்கான மகஜரை கோறளைப்பற்றுப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் கையளித்துள்ளனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,'ஸ்ரீகைலாயப் பிள்ளையார் முத்துமாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான காணியை தனியார் நபர்கள் 5 பேர், சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியுள்ளதுடன், அக்காணியின் ஒருபகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டடமொன்று மேற்படி நபர்களில் ஒருவரினால்; அமைக்கப்பட்டு வருகின்றது.

எனவே, கோவிலுக்குச் சொந்தமான காணியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்றனர்.

   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X