Suganthini Ratnam / 2017 மே 03 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஏறாவூர் அல்-ஜுப்ரியா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (2) நடைபெற்றது.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பில் முதலமைச்சர் தெரிவிக்கையில், கடந்த வாரம் ஓட்டமாவடியில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு மாகாணக் கல்வித்தரம் திருப்தி அடையும் நிலைமையில் இல்லை என்று சிலாகித்துப் பேசியிருந்தார்.
எனவே, இந்த விடயத்தில் கல்விப்புலம் சார்ந்தோரின் அவதானம் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றது.
கிழக்கு மாகாண மக்கள் கடந்த யுத்த சூழ்நிலைக்குள் அகப்பட்டும், நிர்வாகச் சீர்கேடுகளுக்குள் சிக்கியும் வாழ்ந்தவர்கள். அவர்களை கல்வியின் பால் கரிசனை கொள்ள வைப்பது காலத்தின் தேவையாகும்' என்றார்.
'கல்வியில்; பின்னடைவு என்பதை எழுந்தமானமாகக் கூறாமல், அதற்கான காரணங்களையும், தாக்கம் செலுத்தும் காரணிகளையும் உற்றுக் கவனித்து உரிய தீர்வைக் காண வேண்டும்.
இதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் அடிப்படைத் தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையில் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதற்கட்டமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலை அதிபர்களும் தங்களது பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டம், பின்னடைவு, முன்னேற்றத்துக்கான சிபாரிசு, ஆலோசனை, வளப்பயன்பாடு போன்றவை விவரங்களை துல்லியமாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை இம்மாதம் 10ஆம் திகதிக்குள் தத்தமது பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்; ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளரிடம்; சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, கிழக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, எதிர்காலத்தில் கல்வி நடவடிக்கைகள் மறுசீரமைப்புச் செய்யப்படும்.
இந்த விடயத்தில் அதிபர்கள், கல்வி அதிகாரிகள் பொடுபோக்காக நடந்துகொள்ளக் கூடாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .