2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வியில் பின்னடைவு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகளை  மேற்கோள் காட்டி அவர் இதனைக் கூறினார்.

இப்பரீட்சைப்; பெறுபேறுகளின்படி நாட்டிலுள்ள 09 மாகாணங்களில் கிழக்கு மாகாணம் கடைசியாக 09ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 98 கல்வி வலயங்களில் 95 தொடக்கம் 98 வரையான கடைசி 04 இடங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

நகரை அண்மித்த கல்வி வலயங்களில்  ஆரம்பக்கல்வியில் சற்று முன்னேற்றம் இருந்தாலும், இது  ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது  பாரிய வீழ்ச்சியைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

கிராமப்புறப் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வியை கற்பிப்பதற்கு தகுதியான ஆசிரியர்கள் முன்வராமை பிரதான காரணமென்று கல்வியதிகாரிகள் கூறுகின்றனர். நகரிலும் நகரை அண்மித்த சில பாடசாலைகளிலும் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்;டியதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பக்கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு சில காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

மாகாணத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இல்லாதபோதிலும், ஆரம்பக்கல்விக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்களில் பலரும்  இடைநிலை வகுப்புகளுக்கு  கற்பித்;தல் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரையில் ஆசிரியர்களில் ஒருசாரார், அடைவுமட்டத்தை விட வெட்டுப்புள்ளியை இலக்குவைத்து செயற்படுகின்றனர்.  இதனால்,  சில மாணவர்களிடம்  மட்டுமே அக்கறை காட்டும் தன்மை அவர்களிடம் காணப்படுகின்றது. எனவே, அடுத்த வருடம் ஆரம்பக்கல்வி வளர்ச்சிக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X