2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் பத்து வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில் 

கிழக்கு மாகாணத்தில் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்  பத்து வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் நஸீர், நேற்று சனிக்கிழமை (06) தெரிவித்தார்.

மாகாணச் சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்ன தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பு நாரேன்பிட்டிய, இரத்த வங்கி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் 7 நாட்களுக்கு அமெரிக்காவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் காரணமாக, அவருக்குப் பதில், கிழக்குமாகாண முதலமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவரிதனைத் தெரிவித்திருந்தார். 

கிழக்கு மாகாணத்திலிருக்கும் சகல வைத்தியசாலைகளுக்கும் சகல வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் இல்லாத நிலமைகளை உடனடியாகத் தீர்க்கவேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்ததாகக் கூறினார்.   

அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளை தரமுயர்த்தித் தரவேண்டும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரினால் அனுமதிகோரியமைக்கு அமைவாகவே குறித்த 10 வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த வகையில்:
அம்பாறை பிராந்திய தெஹியத்தக் கண்டிய ஆதார வைத்தியசாலை, கல்முனைப் பிராந்திய வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, திருகோவில் ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்புப் பிராந்திய வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, திருகோணமலை பிராந்திய வைத்தியசாலை, மூதூர் ஆதாரவைத்தியசாலைகள் போன்ற 5 ஆதார வைத்தியசாலைகளும் ' பி' தரத்திலிருந்ததை 'ஏ' தரத்துக்குத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

'சீ' தரத்தில் இருக்கும் மட்டக்களப்பு பிராந்திய மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையை 'ஏ' தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பப்பிரிவு வைத்தியசாலைகளாக இருக்கும் கல்முனை பிராந்திய சம்மாந்துறை மல்வத்த வைத்தியசாலை மற்றும் வான் எல வைத்தியசாலைகளை பிரதேச வைத்தியசாலையாகவும் 'சீ'  தரத்துக்குமாக மாற்றி தரமுயர்த்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட பதவிசிறிபுர மற்றும் கோமரங்கடவல பிரதேசத்திலிருக்கும் 'சீ' தர பிரதேச வைத்தியசாலைகளை  மாவட்ட வைத்தியசாலைகளாகவும்  'பி'  தரத்துக்குமாக மாற்றி தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X