Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 40 வருட காலம் பழைமை வாய்ந்த கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை, 26 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் (24) மாநகர சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது முதல்வர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால் 1979ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கல்முனை பொதுச் சந்தை, ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மத்திய நிலையமாக காணப்பட்டது. மிகவும் பழைமை வாய்ந்த இச்சந்தை கட்டிட தொகுதியை புனரமைப்பு செய்வதற்கு முன்னர், பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பரும் இதற்காக நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன் புனரமைப்பு விடயத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மிகவும் கரிசனையுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. கல்முனை மாநகர சபையின் முதல்வராக பதவியேற்றுள்ள நானும் அவரும் இவ்விடயத்தை ஒன்றிணைந்து முன்னெடுக்கத் தயாராகி விட்டோம்.
இப்புனரமைப்பு திட்டத்துக்காக நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மூலம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் 26 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இப்புனரமைப்பு விடயத்தில் எத்தகைய அர்ப்பணிப்புகளையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வர்த்தகர்களின் ஒத்துழைப்பே முக்கியமானதாகும்.
சந்தை கடைகளுக்கான வாடகை நிலுவையை செலுத்துதல், ஒப்பந்தத்தை மீளமைப்பு செய்தல், தேவையற்ற கட்டுமானங்களை அகற்றுதல், புனரமைப்பு முடியும் வரை வியாபாரத் தளங்களை இடமாற்றுதல் போன்ற விடயங்களில் வியாபாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அடுத்த வருடம் நடுப்பகுதிக்குள் புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்து, தம்புள்ளை, பண்டாரவளை போன்று இங்கும் நவீனமயப்பட்ட ஓர் அழகிய சந்தையை எம்மால் காண முடியும்” என்றார்.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொதுச் சந்தை மேற்பார்வையாளர் ஏ.எல்.எம்.இன்சாட், சுகாதார பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.அஹ்சன், வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன், செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
3 minute ago
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
25 minute ago