2025 மே 23, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் பொதுச் சுயேட்சை அணி ஷூரா கவுன்ஸில் தீர்மானம்

Yuganthini   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

 

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாவிட்டால் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலை மையப்படுத்தி, பொதுவான சுயேட்சை அணியொன்றை களமிறக்குவது குறித்து சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் கவனம் செலுத்தி வருவதாக, அதன் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸிலின் பொதுச் சபைக் கூட்டம், அதன் பிரதித் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.ஏ.ஜப்பார் தலைமையில் நேற்று (10) நடைபெற்றபோது, இவ்விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இதற்காகான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படுவதை தடுப்பதற்கு பகிரங்கமாகவே சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் பலத்த இழுபறி நிலவி வருகின்றது. காலத்துக்கு காலம் இவ்விடயம் அரசியல் தலைமைகளால் பந்தாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

“ஆகையினால், எமது கோரிக்கையை வென்றெடுப்பதற்காக காத்திரமான மூலோபாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

“உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். 

“இல்லையேல் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து அரசியல் கட்சிகளின் சார்பில் எவரும் போட்டியிடாமல், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலை மையப்படுத்தி பொதுவான சுயேட்சை அணியொன்றை களமிறக்குவதன் மூலம் எமது மக்களின் ஒட்டுமொத்த பலத்தை நிரூபிக்கின்ற அதேவேளை, கல்முனைக்குடி சார்பில் முன்வைக்கப்படுகின்ற வாதங்களுக்கு ஒரு தெளிவையும் பெற்றுக்கொடுக்குமென, எமது ஷூரா கவுன்ஸில் எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X