2025 மே 23, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண ஆட்சி: நிறைவை நோக்கியது

Yuganthini   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எச்.. ஹுஸைன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்துள்ள கிழக்கு மாகாண ஆட்சி, தனி இனத்துக்குரிய பதவிகளை நோக்கி நகர்த்தப்படாமல், அது ஒரு நிறைவான இலக்கை நோக்கி நகர்த்தப்படுகின்றது என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மாகாண சபைப் பதவிக் காலம் நீடிக்கப்படுமாக இருந்தால், அடுத்த முதலமைச்சர் பதவி, சிறுபான்மை இனங்களில், எந்த இனத்தவருக்குக் கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு, அவர் இன்று (11) பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

“சிறுபான்மை மக்களின் தனித்துவமான உரிமைகள், அரசியல் அபிலாஷைகள், பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, இன ஐக்கியம் என்பன, தற்போதைய கிழக்கு மாகாண ஆட்சியின் இலக்குகளாகும்.

“மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில், தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். எனவே, மூவினங்களுக்கிடையிலும் எந்தவித இன முரண்பாடுகளுமில்லாமல், ஐக்கியப்பட்ட ஆட்சியை நடத்திச் செல்வதே, எமது முழுமுதற் கடமையாகும்.

“அதேவேளை, ஒட்டு மொத்த மாகாணத்தில் மூவின மக்களுடைய பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றுக்கானத் தீர்வுகளை அடைந்து கொள்வதற்குரிய யுக்திகளை வகுத்ததாக, இப்பொழுது மாகாண சபை நி​ர்வாகம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

“இந்த மாகாணமே சகல இனங்களும் சகல கட்சிகளும் பங்கு கொண்ட நல்லாட்சியாக, முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கின்றது.

“கிழக்கில், இன நல்லுறவு சிறப்பாக இல்லை என்று எப்போதாவதொருமுறை, கொழும்பிலிருந்து கிழக்குக்கு வந்து, மேலெழுந்த வாரியாகப் பேசிவிட்டுச் செல்கின்ற அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்கு, நான் ஒரு வித அங்கிகாரமும் வழங்குவதில்லை. நேரடியாகச் சொல்வதாயின் அவர்களை நான் கணக்கெடுப்பதே இல்லை.

“வெறுமனே, வந்து விட்டோம்; ஏதாவது இன உணர்வோடு கவர்ச்சியாகப் பேச வேண்டும் என்பதற்காகக் கள நிலைவரங்களை அறிந்து கொள்ளாமல், உளறிவிட்டுச் செல்வோர் பற்றி ஒருவரும் கணக்கெடுப்பதில்லை. ஆதாரபூர்வமாக, ஆக்கபூர்மாக கரிசனையுடன் எதையாவது சொன்னால்,  அதைப்பற்றி சிந்திக்கலாம். அப்படிச் செய்வதுதான் சரியானதும் தேவையானதும் ​ஆகும்” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X